Published : 22 Dec 2023 12:18 AM
Last Updated : 22 Dec 2023 12:18 AM

SA vs IND | ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா: 3-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது

பார்ல்: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. மூன்றாவது போட்டியில் சிறப்பாக பந்து வீசி, 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் அர்ஷ்தீப் சிங்.

இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இந்நிலையில், கடந்த 17-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி பார்ல் நகரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது. 297 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்கை விரட்டியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்கா விக்கெட்களை இழந்தது. ஹென்ரிக்ஸ் 19 ரன்களிலும், வான்டர் டூசன் 2 ரன்களிலும் வெளியேறினர். மார்க்ரம் மற்றும் ஜோர்ஸி இணைந்து 65 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த கூட்டணியை வாஷிங்டன் சுந்தர் தகர்த்தார். மார்க்ரம், 36 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து ஜோர்ஸி, கிளாசன், முல்டர், மில்லர், மகாராஜ், வில்லியம்ஸ் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதில் கிளாசன் பேட்டில் பட்ட பந்தை அபாரமாக கேட்ச் பிடித்து வெளியேற்ற உதவினார் சாய் சுதர்ஷன். 45.5 ஓவர்கள் முடிவில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்கா. அதன் மூலம் இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றது. தொடரையும் 2-1 என வென்றுள்ளது. இந்த தொடரில் சாய் சுதர்ஷன், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். 3-வது போட்டியில் அர்ஷ்தீப் சிங், 9 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளும், அக்சர் மற்றும் முகேஷ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.

முன்னதாக, மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்காக சாய் சுதர்ஷன் - ரஜத் பட்டிதார் ஓப்பனர்களாக களமிறங்கினர். நந்த்ரே பர்கர் வீசிய 5வது ஓவரில் 22 ரன்களில் போல்டானார் ரஜத் படிதார். கடந்த முறை நிலைத்து ஆடிய சாய் சுதர்ஷன் 10 ரன்களில் எல்பிடபள்யூ முறையில் விக்கெட்டானது ஏமாற்றம். 8 ஓவர் முடிவில் இரண்டு ஓப்பனர்களையும் பறிகொடுத்த இந்திய அணி 50 ரன்களைச் சேர்த்திருந்தது. சஞ்சு சாம்சன் - கேல்.ராகுல் இணை கைகோத்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர். ஆனாலும் ராகுல் 21 ரன்களில் அவுட்.

ஒருபுறம் சஞ்சு சாம்சன் வெளுத்துக்கட்ட திலக் வர்மா உறுதுணையாக இருந்தார். 42-வது ஓவரில் 52 ரன்களுடன் அவரும் கிளம்பினார். 110 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். ஆனால், லிசாட் வில்லியம்ஸ் வீசிய 46-வது ஓவரில் கேட்ச் கொடுத்து 108 ரன்களுடன் வெளியேறினார். அதற்கு பின் வந்த அக்சர் படேல் வழக்கம் போல நிலைக்காமல் 1 ரன்னில் பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களிலும், ரிங்கு சிங் 38 ரன்களிலும் அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 296 ரன்களைச் சேர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் 3 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளையும், லிசாட் வில்லியம்ஸ், கேசவ் மகாராஜ், வியன் முல்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x