Published : 21 Dec 2023 08:29 PM
Last Updated : 21 Dec 2023 08:29 PM
பார்ல்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை சேர்த்துள்ளது. சஞ்சு சாம்சன் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மாலை 4.30 மணி அளவில் பார்ல் நகரில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சாய் சுதர்ஷன் - ரஜத் பட்டிதார் ஓப்பனர்களாக களமிறங்கினர். நந்த்ரே பர்கர் வீசிய 5வது ஓவரில் 22 ரன்களில் போல்டானார் ரஜத் படிதார். கடந்த முறை நிலைத்து ஆடிய சாய் சுதர்ஷன் 10 ரன்களில் எல்பிடபள்யூ முறையில் விக்கெட்டானது ஏமாற்றம். 8 ஓவர் முடிவில் இரண்டு ஓப்பனர்களையும் பறிகொடுத்த இந்திய அணி 50 ரன்களைச் சேர்த்திருந்தது. சஞ்சு சாம்சன் - கேல்.ராகுல் இணை கைகோத்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர். ஆனாலும் ராகுல் 21 ரன்களில் அவுட்.
ஒருபுறம் சஞ்சு சாம்சன் வெளுத்துக்கட்ட திலக் வர்மா உறுதுணையாக இருந்தார். 42-வது ஓவரில் 52- ரன்களுடன் அவரும் கிளம்பினார். 110 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். ஆனால், லிசாட் வில்லியம்ஸ் வீசிய 46வது ஓவரில் கேட்ச் கொடுத்து 108 ரன்களுடன் வெளியேறினார். அதற்கு பின் வந்த அக்சர் படேல் வழக்கம் போல நிலைக்காமல் 1 ரன்னில் பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களிலும், ரிங்கு சிங் 38 ரன்களிலும் அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 296 ரன்களைச் சேர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் 3 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளையும், லிசாட் வில்லியம்ஸ், கேசவ் மகாராஜ், வியன் முல்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT