Published : 21 Dec 2023 06:20 AM
Last Updated : 21 Dec 2023 06:20 AM
புதுடெல்லி: மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2023-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை நேற்று அறிவித்தது. இதன்படி மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு பாட்மிண்டன் வீரர்களான ஷிராக் ஷெட்டி, சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி ஆகியோர் தேர்வாகி உள்ளனர். ஷிராக், சாட்விக் ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருந்தது. மேலும் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும், காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றியிருந்தது.
அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி உள்ளிட்ட 26 பேர் தேர்வாகி உள்ளனர். 33 வயதான முகமது ஷமி, கடந்தமாதம் முடிவடைந்த ஐசிசி உலகக் கோப்பை தொடரில் 24 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தார். தமிழகத்தை சேர்ந்த ஆர்.வைஷாலி சமீபத்தில்கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார். இவர், இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.துரோணாச்சார்யா விருதுக்கு தமிழகத்தைசேர்ந்த ஆர்.பி.ரமேஷ் தேர்வாகி உள்ளார்.
அர்ஜூனா விருது பெறுபவர்கள் விவரம்: ஓஜாஸ் பிரவீன் தியோடலே (வில்வித்தை), அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை), முரளி ஸ்ரீசங்கர் (தடகளம்), பாருல் சவுத்ரி (தடகளம்), முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை), ஆர்.வைஷாலி (செஸ்), முகமது ஷமி (கிரிக்கெட்), அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்), திவ்யகிருதி சிங் (குதிரையேற்றம்), திக் ஷா தாகர் (கோல்ப்), கிருஷ்ணன் பகதூர் பதக் (ஹாக்கி), சுசீலா ஷானு (ஹாக்கி), பவன் குமார் (கபடி), ரித்து நெகி (கபடி), நஸ் ரீன் (கோ-கோ), பிங்கி (லான் பவுல்ஸ்), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கி சுடுதல்), ஈஷா சிங் (துப்பாக்கி சுடுதல்), ஹரிந்தர் பால் சிங் சாந்து (ஸ்குவாஷ்), அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்), சுனில் குமார் (மல்யுத்தம்), அன்டிம் (மல்யுத்தம்), நவோரெம் ரோஷிபினா தேவி (வுஷூ), ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை), இல்லூரி அஜய்குமார் ரெட்டி (பார்வையற்றோர் கிரிக்கெட்), பிராச்சி யாதவ் (பாரா கனோயிங்).
துரோணாச்சார்யா விருது: லலித்குமார் (மல்யுத்தம்), ஆர்.பி.ரமேஷ் (செஸ்), மஹாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), சிவேந்திர சிங் (ஹாக்கி), கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் (மல்லகம்ப்).
துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் சாதனையாளர் பிரிவு): ஜஸ்கிரத் சிங் கிரேவால் (கோல்ப்), பாஸ்கரன் (கபடி), ஜெயந்த குமார் புஷிலால் (டேபிள் டென்னிஸ்).
வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது: மஞ்சுஷா கன்வர் (பாட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி).
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு 2024-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்க உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT