Published : 20 Dec 2023 06:15 PM
Last Updated : 20 Dec 2023 06:15 PM
துபாய்: ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலத்தில் சமீர் ரிஸ்வி என்ற அறிமுகமில்லாத இளம் வீரரை ரூ.8.4 கோடி கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
நேற்று நடந்த ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலத்தின் 6வது செட்டில் சர்வதேச போட்டியில் அறிமுகமில்லாத பேட்டர்கள் ஏலம் விடப்பட்டனர். இந்தச் சுற்றில் முதல் வீரராக சுபம் துபே அடிப்படை தொகையான இருபது லட்சத்துக்கு ஏலத்திற்கு விடப்பட்டார். அவரை ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே கடும் போட்டியிட்ட நிலையில் இறுதியில் ரூ.5.8 கோடிக்கு சுபம் துபேவை கைப்பற்றியது ராஜஸ்தான்.
இதேபோல் மற்றொரு இளம் பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வியை ரூ.8.4 கோடி கொடுத்து வாங்கி சர்ப்ரைஸ் அளித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இருபது லட்சத்தில் தொடங்கிய ஏலத்தில் சமீர் ரிஸ்வியை கைப்பற்ற சென்னை, டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. அப்போது சென்னை தரப்பில் கையில் இருந்தது 11 கோடி மட்டுமே. என்றாலும் கடும் போட்டிக்கு மத்தியில் சமீர் ரிஸ்வியை கைப்பற்றியது. ஹார்ட் ஹிட்டிங் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஷாருக்கானை தான் சிஎஸ்கே பிக் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் சமீர் ரிஸ்வியை தேர்வு செய்து அதிர்ச்சி கொடுத்தது.
யார் இந்த சமீர் ரிஸ்வி? - இதை தெரிந்துகொள்வது முன்னால் சமீர் ரிஸ்வி குறித்து முன்னாள், இந்நாள் வீரர்கள் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பே கூறியது இங்கே... ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் பேசுகையில், "சமீர் ரிஸ்வி என்கிற உத்தரப் பிரதேச வீரர் நடந்து முடிந்த உபி லீகில் மிகச் சிறப்பாக ஆடியிருக்கிறார். குறைந்தபட்சம் 3-4 கோடிக்காவது அவரை அணிகள் ஏலத்தில் எடுக்கும்" என்று கணித்தார்.
"ஒரு பேட்ஸ்மேனாக சமீர் ரிஸ்வி வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர். லக்னோ அணிக்காக ஆடினால் அவர் இன்னும் நம்பிக்கையுடன் ஆடுவார்" என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியிருந்தார்.
மற்றொரு முன்னாள் வீரரான அபினவ் முகுந்த் கூறுகையில், "ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவுள்ள சிலர் சமீர் ரிஸ்வி குறித்து என்னிடம் புகழ்ந்து பேசினார்கள். ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடும் அவரின் யுக்தியை வைத்து அவரை வலது கை ரெய்னா என்றார்கள். பல அணிகளும் இவரை ஏலத்தில் எடுக்க போட்டி போடலாம்" என்று ஏலத்துக்கு முன்பே கூறியிருந்தார்.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி, தமிழகத்தில் TNPL தொடர் போல் உத்தரப்பிரதேசத்தின் நடத்தப்பட்டு லீக் மூலமாக வெளியே தெரிந்தவர். கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணி கேப்டனாகவும் இருக்கும் சமீர் ரிஸ்வி, சமீபத்திய உபி டி20 லீக்கில் 9 இன்னிங்ஸ்களில் 189 ஸ்ட்ரைக் ரேட் உடன் 455 ரன்கள் குவித்துள்ளார். ஒரு போட்டியில் அதிரடியாக 59 பந்துகளில் 122 ரன்களை அடித்தது உட்பட இதில் இரண்டு சதங்கள் அடக்கம். அந்த சீசனில் மட்டும் 35 பவுண்டரிகளையும் 38 சிக்ஸர்களையும் விளாசி மற்ற அணிகளை கலங்கடித்தார் சமீர்.
நடந்து முடிந்த சையத் முஷ்தாக் அலி தொடரிலும் 18 சிக்ஸர்களை அடித்துள்ள சமீர், உ.பி அளவிலான கிரிக்கெட் தொடர்களில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்று அறியப்படுகிறார். வலதுகை பேட்ஸ்மேனாக அதிரடியாக ஆடி, குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக இவர் விளையாடும் விதம் ஐபிஎல் அணிகளை கவரவே, தற்போது ரூ.8.40 கோடிக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT