Published : 20 Dec 2023 06:22 AM
Last Updated : 20 Dec 2023 06:22 AM
துபாய்: ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுத்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நேற்று துபாயில் நடைபெற்றது. 333 வீரர்களை உள்ளடக்கிய பட்டியலில் இருந்து 10 அணிகளும் தங்களுக்கு நிரப்பப்பட வேண்டிய இடங்களை பூர்த்தி செய்தனர். ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கை ஏலம் எடுப்பதில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் மிட்செல் ஸ்டார்க். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இங்கிலாந்து ஆல்ரவுண்டரான சாம் கரனை, பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.50 கோடிக்கு ஏலம் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. மிட்செல் ஸ்டார்க்கின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அவர், தற்போது அதைவிட பன்மடங்கு தொகைக்கு வாங்கப்பட்டுள்ளார்.
மிட்செல் ஸ்டார்க்குடன், மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் ஷெர்பான் ரூதர்போர்டை ரூ.1.50 கோடிக்கும், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எஸ்.பரத்தை ரூ.50 லட்சத்துக்கும், வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சக்காரியாவை ரூ.50 லட்சத்துக்கும், இந்தியாவின் ஆல்ரவுண்டர் ரமன்தீப் சிங்கை ரூ.20 லட்சத்துக்கும், பேட்ஸ்மேன் அங்கிரிஷ் ரகுவன்ஷியை ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி.
சன் ரைசர்ஸ்: ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டருமான பாட் கம்மின்ஸை சன் ரைசர்ஸ் அணி ரூ.20.50 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 2-வது அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் ஆனார் கம்மின்ஸ். அவரை ஏலம் எடுப்பதில் சிஎஸ்கே, மும்பை, பெங்களூரு அணிகள் ஆர்வம் காட்டின. ஆனால் அவரை, அதிக தொகைக்கு ஹைதராபாத் அணி வளைத்து போட்டது.
மேலும் ஹைதராபாத் அணி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட்டை ரூ.6.80 கோடிக்கும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட்டை ரூ.1.60 கோடிக்கும், இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்காவை ரூ.1.50 கோடிக்கும், இந்திய பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங்கை ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்: சென்னை சூப்பர் கிங்ஸ், நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான டேரில் மிட்செல்லை ரூ.14 கோடிக்கும், இந்திய அணியின்ஷர்துல் தாக்குரை ரூ.4 கோடிக்கும், வங்கதேசத்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான முஸ்டாபிஸுர் ரஹ்மானை ரூ.2 கோடிக்கும், நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை ரூ.1.80 கோடிக்கும், ஏலம் எடுத்தது.
தொடர்ந்து உத்தரபிரதேசத்தை சேர்ந்த பேட்ஸ்மேனான சமீர் ரிஸ்வியை ரூ.8.40 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது. ரூ.20 லட்சம் அடிப்படை தொகையை நிர்ணயிக்கப்பட்டிருந்த அவரை ஏலம்எடுப்பதில் மும்முனைபோட்டி நிலவியது. சிஎஸ்கேவுடன் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி அணிகளும் மல்லுக்கட்டின. டெல்லி அணி ரூ.7.60 கோடியை தாண்டியதும் ஒதுங்கிக் கொண்டது. இதன் பின்னர் குஜராத் அணியுடன் மல்லுக்கட்டி இறுதியாக சமீர் ரிஸ்வியை வாங்கியது சிஎஸ்கே அணி.
டெல்லி கேபிடல்ஸ்: டெல்லி கேபிடல்ஸ் அணியானது இந்திய அணியின் யு-19 வீரரான ஜார்க்கண்ட்டை சேர்ந்தவிக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் குஷாக்ராவை ரூ.7.20 கோடிக்கும், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்சனை ரூ.5 கோடிக்கும் இங்கிலாந்து பேட்ஸ்மேனான ஹாரி புரூக்கை ரூ.4 கோடிக்கும், இந்தியஆல்ரவுண்டர் சுமித் குமாரை ரூ.1 கோடிக்கும், தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர்பேட்ஸ்மேனான டிரிஸ்டன் ஸ்டப்ஸை ரூ.50 லட்சத்துக்கும், விக்கெட் கீப்பர் ரிக்கி புயியைரூ.20 லட்சத்துக்கும், பந்து வீச்சாளர் ரஷிக் தாரை ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தது.
குஜராத் டைட்டன்ஸ்: குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனை ரூ.10 கோடிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான ஷாருக்கானை ரூ.7.40 கோடிக்கும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவை ரூ.5.80 கோடிக்கும், விக்கெட் கீப்பர் ராபின் மின்ஸை ரூ.3.60 கோடிக்கும், பந்துவீச்சாளர்களான சுஷாந்த் மிஷ்ராவை ரூ.2.20 கோடிக்கும், கார்த்திக் தியாகியை ரூ.60 லட்சத்துக்கும், ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான அஸ்மதுல்லா ஓமர்ஸாயை ரூ.50 லட்சத்துக்கும், இந்திய பந்து வீச்சாளர் மானவ் சுதாரை ரூ.20 லட்சத்துக்கும் வாங்கியது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவியை ரூ.6.40 கோடிக்கு வாங்கியது. தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர் எம்.சித்தார்த்தை ரூ.2.40 கோடிக்கும், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லியை ரூ.2 கோடிக்கும், ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் அஷ்டன் டர்னரை ரூ.1 கோடிக்கும், இந்தியாவின் அர்ஷின் குல்கர்னியை ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ்: மும்பை அணியானது தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் ஜெரால்டு கோட்ஸியை ரூ.5 கோடிக்கும், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூவன் துஷாராவை ரூ.4.80 கோடிக்கும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்காவை ரூ.4.60 கோடிக்கும், இந்திய பந்து வீச்சாளர் ஸ்ரேயஸ் கோபால், ஆல்ரவுண்டர்கள் அன்ஷுல் கம்போஜ், நமன் திர் ஆகியோரை தலா ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ்: பஞ்சாப் கிங்ஸ்அணியானது ஆல்ரவுண்டர்களான இந்தியாவின் ஹர்ஷால் படேலை ரூ.11.75 கோடிக்கும்,இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸைரூ.4.20 கோடிக்கும் ஏலம் எடுத்தது.தொடர்ந்து இந்தியாவின் ஆல்ரவுண்டர்களான தனய் தியாகராஜன், விஷ்வநாத் பிரதாப் சிங், அசுதோஷ் சர்மா,பேட்ஸ்மேன் சஷாங்க் சிங் ஆகியோரை தலா ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது மேற்கு இந்தியத் தீவுகள் டி20 அணியின் கேப்டன் ரோவ்மன் பவலை ரூ.7.40 கோடிக்கும், இந்திய பேட்ஸ்மேன் ஷுபம் துபேவை ரூ.5.80 கோடிக்கும், இங்கிலாந்து விக்கெட் கீப்பரான டாம் கோஹ்லர்-காட்மோரை ரூ.40 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தது.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கடும் போட்டிக்கு இடையே மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பை ரூ.11.50 கோடிக்கும், இந்திய பந்து வீச்சாளர் யாஷ்தயாளை ரூ.5 கோடிக்கும், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டாம் கரனை ரூ.1.50 கோடிக்கும் வாங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT