Published : 19 Dec 2023 04:14 PM
Last Updated : 19 Dec 2023 04:14 PM

IPL 2024 Auctions | புதிய வரலாறு படைத்த மிட்செல் ஸ்டார்க்... ரூ.24.75 கோடிக்கு வாங்கிய கொல்கத்தா!

துபாய்: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் படைத்த சில மணித்துளிகளில், அதனை உடைத்து புதிய வரலாறு படைத்துள்ளார் சக அணி வீரர் மிட்செல் ஸ்டார்க். அவரை ரூ.24.75 கோடிக்கு வாங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கடுமையான போட்டிக்கு பிறகு ரூ.24.75 கோடி கொடுத்து வாங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் படைத்த சில மணித்துளிகளில் அதனை உடைத்து புதிய வரலாறு படைத்தார் மிட்செல் ஸ்டார்க்.

தற்போது நடந்து வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் சில மணிநேரங்களுக்கு முன்பு பாட் கம்மின்ஸை ரூ.20.5 கோடிக்கு வாங்கியிருந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஏலத்தின் 4வது செட்டில் இந்த சாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்தார் மிட்செல் ஸ்டார்க். குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஸ்டார்க்கை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் கொல்கத்தா அணி நிர்வாகம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து ஸ்டார்க்கை கைப்பற்றியது. அதேநேரம் ஆஸியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட்டை எந்த அணியும் வாங்கவில்லை.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவை குஜராத் டைட்டன்ஸ் அணி 5.80 கோடி ரூபாய்க்கும், ஷிவம் மவியை ரூ.6.8 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி மேற்கிந்திய தீவு வீரர் அல்சாரி ஜோசப்பை 11.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது. சேத்தன் சக்கரியாவையும், கேஎஸ் பரத்தையும் கொல்கத்தா நிர்வாகம் தலா ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது. டிரிஸ்டன் ஸ்டப்ஸை டெல்லி கேபிட்டல்ஸ் ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது.

முந்தைய அப்டேட்ஸ்:

  • இலங்கை அணி வீரர் வனிந்து ஹசராங்காவை அடிப்படை விலையான 1.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வாங்கியது.
  • உலகக் கோப்பை தாக்கத்தை ஏற்படுத்திய நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
  • விபத்தில் சிக்கி கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதல்முறையாக இந்த ஏலத்தில் கலந்துகொண்டார்.
  • முதல் வீரராக மேற்கிந்திய தீவுகள் வீரர் ரோவ்மன் பவல் ஏலம் விடப்பட்டார். ரூ.1 கோடியில் தொடங்கி ரூ.7.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை வாங்கியிருக்கிறது.
  • இரண்டாவதாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை 4 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கியது.
  • உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட்டை ரூ.6.8 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹெட்டிற்காக கடுமையாக போராடிய நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவரை ஏலத்தில் வென்றது.
  • இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ஷர்துல் தாகூரை ஏலத்தில் 4 கோடிக்கு மீண்டும் வாங்கியிருக்கிறது சென்னை அணி.
  • தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸியை ரூ.5 கோடி கொடுத்து வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.
  • இந்திய வேக பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலுக்கு இம்முறை ஏலத்தில் அதிக டிமாண்ட் இருந்தது. ரூ.2 கோடி அடிப்படை விலையில் தொடங்கி, ரூ.11.75 கோடிக்கு பஞ்சாப் அணி அவரை வாங்கியது.
  • உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடிய நியூஸிலாந்து வீரரான டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி வாங்கியுள்ளது.
  • கிறிஸ் வோக்ஸ் ரூ.4.2 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.
  • Unsold வீரர்கள்: இந்திய வீரர்கள் மனீஷ் பாண்டே, கருண் நாயர், ஆஸி வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x