Published : 19 Dec 2023 02:47 PM
Last Updated : 19 Dec 2023 02:47 PM
துபாய்: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ். அவரை ரூ.20.5 கோடிக்கு வாங்கியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
ரூ.2 கோடி அடிப்படை விலையில் ஏலம் விடப்பட்ட அவரை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் போட்டி போட்டன. ரூ.7 கோடி வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்க ஆர்வம் காட்டியது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகமும், சன்ரைசர்ஸ் நிர்வாகமும் குதிக்க ஏலம் சூடுபிடித்தது. சன்ரைசர்ஸ் ரூ.12 கோடி என விலையை அதிகரிக்க, ஆர்சிபி அதை ரூ.17 கோடி ஆக்கியது. இறுதியில் ரூ.20.5 கோடிக்கு அவரை வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இதன்மூலம் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன வீரர் எனும் சாதனையை படைத்தார் கம்மின்ஸ். இதற்கு முன் பஞ்சாப் அணி ரூ.18.5 கோடி கொடுத்து இங்கிலாந்து வீரர் சாம் கர்ரனை வாங்கியதுதான் அதிகபட்சமாக இருந்தது.
சென்னை அணியில் ரச்சின், ஷர்துல்: உலகக் கோப்பை தாக்கத்தை ஏற்படுத்திய நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். அதேபோல் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ஷர்துல் தாகூரை ஏலத்தில் 4 கோடிக்கு மீண்டும் வாங்கியிருக்கிறது சென்னை அணி. இதற்கு முன்பும் ஷர்துல் சென்னை அணிக்கு ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸியை ரூ.5 கோடி கொடுத்து வாங்கியது மும்பை இந்தியன்ஸ். இந்திய வேக பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலுக்கு இம்முறை ஏலத்தில் அதிக டிமாண்ட் இருந்தது. ரூ.2 கோடி அடிப்படை விலையில் தொடங்கி, ரூ.11.75 கோடிக்கு பஞ்சாப் அணி அவரை வாங்கியது. உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடிய நியூஸிலாந்து வீரரான டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி வாங்கியுள்ளது. கிறிஸ் வோக்ஸ் ரூ.4.2 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கடுமையான போட்டிக்கு பிறகு ரூ.24.75 கோடி கொடுத்து வாங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் படைத்த சில மணித்துளிகளில் அதனை உடைத்து புதிய வரலாறு படைத்தார் மிட்செல் ஸ்டார்க். தற்போது நடந்து வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் சில மணிநேரங்களுக்கு முன்பு பாட் கம்மின்ஸை ரூ.20.5 கோடிக்கு வாங்கியிருந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஏலத்தின் 4வது செட்டில் இந்த சாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்தார் மிட்செல் ஸ்டார்க். குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஸ்டார்க்கை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் கொல்கத்தா அணி நிர்வாகம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து ஸ்டார்க்கை கைப்பற்றியது. அதேநேரம் ஆஸியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட்டை எந்த அணியும் வாங்கவில்லை.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவை குஜராத் டைட்டன்ஸ் அணி 5.80 கோடி ரூபாய்க்கும், ஷிவம் மவியை ரூ.6.8 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி மேற்கிந்திய தீவு வீரர் அல்சாரி ஜோசப்பை 11.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது. சேத்தன் சக்கரியாவையும், கேஎஸ் பரத்தையும் கொல்கத்தா நிர்வாகம் தலா ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது. டிரிஸ்டன் ஸ்டப்ஸை டெல்லி கேபிட்டல்ஸ் ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது.
முந்தைய அப்டேட்ஸ்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT