Published : 19 Dec 2023 12:46 PM
Last Updated : 19 Dec 2023 12:46 PM

IPL Auction | ஐபிஎல் ஏலதாரராக முதல் பெண்! - யார் இந்த மல்லிகா சாகர்?

துபாய்: ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலத்தை முதல்முறையாக மல்லிகா சாகர் என்ற பெண் ஒருவர் நடத்தவிருக்கிறார்.

ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் தொடங்கியுள்ளது. இந்த ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 333 வீரர்கள் உள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 30 பேர் உட்பட மொத்தம் 77 வீரர்களை தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் ஏலம் எடுக்க உள்ளன. மொத்தம் உள்ள 333 பேர் பட்டியலில் 214 பேர் இந்திய வீரர்கள். மீதம் உள்ள 119 பேர் வெளிநாட்டு வீரர்கள். இதில் 2 வீரர்கள் ஐசிசி உறுப்பு நாடுகளை சேர்ந்தவர்கள்.இறுதிப் பட்டியலில் உள்ள வீரர்களில் 116 பேர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர்கள். மீதம் உள்ள 218 பேர் இதுவரை சர்வதேச போட்டியில் அறிமுகமாகாத வீரர்கள் ஆவர். இந்த ஏலத்துக்காக 10 அணிகளும் சுமார் ரூ.262.95 கோடியை செலவழிக்க உள்ளன.

2018-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை ஹ்யூக் எட்மடஸ் என்பவரும், அதற்கு முன் ரிச்சர்ட் மேட்லி என்பவரும் ஐபிஎல் ஏலத்தை நடத்தி வந்தனர். ஆனால் இம்முறை ஐபிஎல் மினி ஏலத்தை வழிநடத்த உள்ளார் மல்லிகா சாகர் என்ற பெண். இதன்மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் முதல் பெண் ஏலம் விடுபவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மல்லிகா சாகர். இதற்கு முன் இவர் WPL,PSL போன்ற பல தொடர்களின் ஏலம் விடும் பணிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த மல்லிகா சாகர்?: மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகரின் வயது 48. கடந்த 25 ஆண்டுகளாக ஏலதாரராக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர் அதிகமாக கலைப்பொருள்களை ஏலம் விடும் நிகழ்வுகளில் ஏலதாரராக பணியாற்றியுள்ளார். இந்த அனுபவம் விளையாட்டு ஏலங்களை நடத்துவதில் அவருக்கு கைகொடுத்தது. ப்ரோ கபடி லீக், மகளிர் ஐபிஎல் எனப்படும் டபிள்யூபிஎல் போன்ற தொடரின் ஏலங்களில் ஏலதாரராக பணியாற்றி இருக்கிறார். ப்ரோ கபடி லீக்கின் 7வது சீசன் ஏலத்தை நடத்தி, ப்ரோ கபடி ஏலத்தை நடத்திய முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார். இதன்தொடர்ச்சியாக டபிள்யூபிஎல் ஏலம், தற்போது ஆண்கள் ஐபிஎல் ஏலம் என முன்னேறியுள்ளார்.

இதையடுத்து இதுகுறித்து பதிவிட்டுள்ள மல்லிகா சாகர், “ஐபிஎல் ஏலத்தை நடத்த ஆவலாகக் காத்திருக்கிறேன்” என்றுள்ளார். இந்த மல்லிகா, க்ரிஸ்டி எனப்படும் முதன்மையான ஏல நிறுவனத்தில் பணியைப் பெற்ற இந்தியாவை சேர்ந்த முதல் பெண் ஏலதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x