Published : 19 Dec 2023 08:32 AM
Last Updated : 19 Dec 2023 08:32 AM
கெபெர்ஹா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்றுமாலை 4.30 மணிக்கு கெபெர்ஹாவில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என தன்வசப்படுத்தும். ஸ்ரேயஸ் ஐயர், டெஸ்ட் அணியுடன் இணைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் ரிங்கு சிங்அல்லது ரஜத் பட்டிதாருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அந்த ஆட்டத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோரது வேகத்தில் தென் ஆப்பிரிக்க அணி 116 ரன்களில் சுருண்டிருந்தது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் 5 விக்கெட்களையும், அவேஷ்கான் 4 விக்கெட்களையும் வேட்டையாடி அசத்தியிருந்தனர்.
அதேவேளையில் பேட்டிங்கில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அரை சதம் அடித்து இலக்கை 16.4 ஓவர்களில் கடக்க உதவினர். இந்நிலையில் இரு அணிகளும் இன்று மீண்டும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி 2-0 எனகைப்பற்றும். கடந்த 2022-ம்ஆண்டு சுற்றுப்பயணத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை 0-3 என இழந்திருந்தது.
இந்த தோல்விக்கு இம்முறை இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிசெய்யக்கூடும். ஸ்ரேயஸ் ஐயர், இந்திய டெஸ்ட் அணியினருடன் இணைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் அல்லது ரிங்கு சிங் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தூரை சேர்ந்த ரஜத் பட்டிதார் கடந்த 2022-ம் ஆண்டு இந்திய அணிக்கு தேர்வானார்.
2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் இதன் பின்னர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் ரஜத் பட்டிதார் தேர்வுசெய்யப்பட்டிருந்தார். ஆனால் இந்த இரு தொடரிலும் விளையாடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் பின்னர் குதிகாலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், தற்போது மீண்டும் அணிக்குள் நுழைந்துள்ளார். ரஜத் பட்டிதார் பேட்டிங் வரிசையில் 4-வது வீரராக களமிறங்கக்கூடியவர். மத்திய பிரதேச அணிக்காக அவர், இந்த வரிசையில்தான் விளையாடி வருகிறார்.
அதேவேளையில் ரிங்கு சிங் தனது அதிரடியால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பந்துகள் அதிக அளவில் பவுன்ஸ் ஆகும் தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில் டி 20 தொடரில் ரிங்கு சிங்முத்திரை பதித்திருந்தார். அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் நடுவரிசையில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யக்கூடும். ரஜத் பட்டிதார், ரிங்கு சிங் ஆகிய இருவருக்குமே வாய்ப்பு வழங்கப்பட்டால் திலக் வர்மா அல்லது சஞ்சு சாம்சன் விளையாடும் லெவனில் இருந்து நீக்கப்படக்கூடும்.
தென் ஆப்பிரிக்க அணியானது இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் செயல்பட முயற்சிக்கக்கூடும். ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், ராஸி வான் டெர் டஸ்ஸன், ஹெய்ன்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், எய்டன் மார்க்ரம் ஆகியோர் மட்டை வீச்சில் பொறுப்புடன் செயல்பட்டால் இந்திய அணிக்கு சவால் கொடுக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT