Published : 18 Dec 2023 05:46 PM
Last Updated : 18 Dec 2023 05:46 PM
மும்பை: கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோகித்தின் பங்களிப்பு, பேட்டிங்கிலும் கொஞ்சம் குறைந்துள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசன் தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப்பட்டது தான் கிரிக்கெட் உலகில் அதிகம் பேசப்படும் விஷயமாக உள்ளது. நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை ரோகித் திறம்பட வழிநடத்திய நிலையில் இந்த மாற்றம் விவாத பொருளாகி உள்ளது.
இந்த மாற்றம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், "இந்த விஷயத்தில் சரி, தவறுக்களுக்குள் நாம் செல்லக்கூடாது. அணியின் நலனுக்காக அவர்கள் முடிவெடுத்துள்ளார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோகித்தின் பங்களிப்பு, பேட்டிங்கிலும் கொஞ்சம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அணியை பிளே ஆப்புக்கு தகுதிபெற வைத்தார். எனினும் அதற்கு முந்தையை ஆண்டு 9-ம் இடமோ, 10-ம் இடமோ தான் அவர் தலைமையில் மும்பை அணி பிடித்தது.
தொடர்ந்து அதிகமான கிரிக்கெட் விளையாடி வருவதால் ரோகித் கொஞ்சம் சோர்வாக இருந்திருக்கலாம். இந்திய அணி மற்றும் ஐபிஎல் கேப்டன்சி என பணிச்சுமையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். என்றாலும், ஹர்திக் பாண்டியா ஒரு இளம் கேப்டன் என்பதை மனதில் இந்த பெரிய மாற்றத்தை மும்பை அணி நிர்வாகம் எடுத்திருக்கலாம். ஹர்திக் இரண்டு முறை குஜராத்தை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். 2022-ல் பட்டத்தை வெல்ல வைத்துள்ளார். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அவரை கேப்டனாக மாற்றியுள்ளார்கள் என நினைக்கிறேன். சில நேரங்களில் புதிய சிந்தனைகள் தேவை. அத்தகைய புதிய சிந்தனையை மும்பை அணிக்கு ஹர்திக் வழங்குவார்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT