Published : 18 Dec 2023 08:02 AM
Last Updated : 18 Dec 2023 08:02 AM

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

பெர்த்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பெர்த்தில் உள்ள வாகா மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில்ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 487 ரன்கள் குவித்தது.டேவிட் வார்னர் 164 ரன்கள் குவித்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 271 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து 216 ரன்கள்முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் 33 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்திருந்தது.

டேவிட் வார்னர் 0, மார்னஷ் லபுஷேன் 2 ரன்களில் குர்ரம் ஷாசாத்பந்தில் ஆட்டமிழந்தனர். உஸ்மான் கவாஜா 34, ஸ்டீவ் ஸ்மித் 43 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம்8 விக்கெட்கள் இருக்க 300 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. இந்நிலையில் தொடர்ந்து அபாரமாக விளையாடினார் கவாஜா. உஸ்மான் கவாஜா 90 ரன்கள் எடுத்த நிலையில் ஷாஹீன் அப்ரிடி பந்தில்ஆட்டமிழந்தார். ஸ்டீவன் ஸ்மித் 45 ரன்களும், டிராவிஸ் ஹெட் 14 ரன்களும் எடுத்து வீழ்ந்தனர்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 68 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 5 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 233 ரன்கள் குவித்திருந்த நிலையில் 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து 450 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது.

ஆனால் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ், நேதன் லயன் ஆகியோரது அபார பந்துவீச்சால் அந்த அணி 30.2 ஓவர்களிலேயே 89 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷபீக் 2, இமாம் உல் ஹக் 10, ஷான் மசூத் 2, பாபர் அஸம் 14, சவுத் ஷகீல் 24, சர்பிராஸ் அகமது4, ஆகா சல்மான் 5, ஆமிர் ஜமால்0, குர்ரம் ஷாசாத் 0, பாஹீம் அஷ்ரப் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். நேதன் லயன் 2 விக்கெட்களையும், பாட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத்தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

500 விக்கெட்களை வீழ்த்தி லயன் சாதனை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் சாதனை புரிந்துள்ளார். பெர்த்தில் நடைபெற்று வந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பாஹீம் அஷ்ரப்பின் விக்கெட்டை நேதன் லயன் நேற்று வீழ்த்தினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 500-வது விக்கெட்டாக அமைந்தது. இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்திய 8-வது பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார். 36 வயதாகும் நேதன் லயன், டெஸ்ட போட்டிகளில் இதுவரை 501 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் வரிசையில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x