Published : 25 Jan 2018 03:58 PM
Last Updated : 25 Jan 2018 03:58 PM
பேட்டிங்குக்கு மிகவும் கடினமான வாண்டரர்ஸ் பிட்சில் 2-ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்க ‘நைட் வாட்ச்மேன்’ ரபாடா 84 பந்துகளைச் சந்தித்து 6 பவுண்டரிகளுடன் 30 அதிமுக்கிய ரன்களை எடுத்து உணவு இடைவேளைக்கு சற்று முன் இஷாந்த் ஷர்மாவிடம் ரஹானே கேட்சுக்கு ஆட்டமிழந்தார்.
அதாவது இந்த அபாயகரமான பிட்சில் புதிய பந்தின் தாக்கத்திலிருந்து தென் ஆப்பிரிக்காவின் முக்கிய பேட்ஸ்மென்களை அவரது இந்த 84 பந்து இன்னிங்ஸ் காப்பாற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் ஆஃப் ஸ்டம்புக்கு முழுதும் நகர்ந்து ஃபுல் லெந்த் பந்தை மிட்விக்கெட் பவுண்டரிக்கு அனுப்பியது உண்மையில் டெய்ல் எண்டரிடம் எதிர்பார்க்க முடியாத கிளாஸ்.
இதுமட்டுமல்ல, பாயிண்டில் அடித்த பவுண்டரியும், இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் பந்து ஒன்றை எக்ஸ்ட்ரா கவர் மீது தூக்கி அடித்து பவுண்டரிக்கு அனுப்பியதும் ரபாடாவின் பேட்டிங்கை பலரது கவனத்தை ஈர்த்தது.
84 பந்துகளை அவர் மட்டுமே புதிய பந்தில் சந்தித்தது குறிப்பிடத்தகுந்த சாதனைதான். காரணம் இந்திய அணியில் நேற்று விஜய், ராகுல், ரஹானே, படேல், பாண்டியா ஆகியோர் சேர்ந்தே 93 பந்துகளையே சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
பந்துகள் கடுமையாக ஸ்விங் ஆகின. ஆம்லா ஒருமுறை இஷாந்த் ஷர்மா பந்தில் அடி வாங்கினார், சிகிச்சைத் தேவைப்பட்டது, ரபாடாவின் உடலையும் பந்து தாக்கியது, ஆனாலும் அசராமல் ஆம்லாவும் ரபாடாவும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக முக்கியமான 64 ரன்களைச் சேர்த்தனர். ஆம்லாவும், ஸ்டீவ் ஸ்மித் போல் ஆஃப் ஸ்டம்புக்கு நன்றாக நகர்ந்து வந்து பந்துகளைச் சந்திக்கும் உத்தியைக் கடைபிடித்தார். அவர் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்களுடனும் டிவில்லியர்ஸ் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக டீன் எல்கர் 4 ரன்களில் புவனேஷ்வர் குமாரின் அற்புதமான பந்துக்கு எட்ஜ் ஆகி வெளியேறினார். லெக் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி எல்கரை முன்னால் இழுத்து வர பந்து வெளியில் ஸ்விங் ஆகி மட்டையின் விளிம்பைப் பிடித்தது. இந்தப் பந்துகளை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இத்தகைய பந்துகளை அதிகம் முயற்சி செய்வதன் மூலம் லெக் திசையில் ரன்களைக் கொடுப்பதும் நடக்கும். கடைசியில் ரபாடா, இஷாந்த் ஷர்மாவின் இத்தகைய பந்து ஒன்றுக்கு ஸ்கொயர் ஆனார் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு கல்லியில் ரஹானேவிடம் கேட்ச் ஆனது. தென் ஆப்பிரிக்கா 81/3. புவனேஷ்வர் குமார் 11 ஓவர்கள் 7 மெய்டன்கள் 2 விக்கெட். இந்திய பவுலர்கள் அனைவருமே அபாயகரமாக வீசி வருகின்றனர், ஏகப்பட்ட பந்துகள் மட்டையைக் கடந்து நூலிழையில் எட்ஜைத் தவறவிட்டுச் சென்றன. ஆனால் அதையெல்லாம் மீறி ரபாடா, ஆம்லா நின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT