Published : 16 Dec 2023 05:51 AM
Last Updated : 16 Dec 2023 05:51 AM

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் | முதல் சுற்றில் அர்ஜுன் எரிகைசி தோல்வி: அரோனியனுக்கு எதிராக டிரா செய்தார் குகேஷ்

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பின் முதல் சுற்றில் அமெரிக்காவின் லெவோன் அரோனியனுக்கு எதிராக விளையாடிய இந்திய கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி நேற்று சென்னையில் தொடங்கியது. இதன் முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், அமெரிக்காவின் லெவோன் அரோனியனுடன் மோதினார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 30-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார். இதனால் இவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டன.

கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இந்தியாவின் அர்ஜுன்எரிகைசி, சகநாட்டைச் சேர்ந்தகிராண்ட் மாஸ்டரான பி.ஹரிகிருஷ்ணாவுடன் மோதினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகிருஷ்ணா 61-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதனால் அவருக்கு முழுமையாக ஒரு புள்ளி கிடைத்தது.

ஹங்கேரியின் சனான் சுகிரோவ், செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கே ஆகியோர் மோதிய ஆட்டம்36-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. உக்ரைனின் பாவெல்எல்ஜனோவ் தனது முதல் சுற்றில் ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூவை எதிர்கொண்டார். இதில் 61-வது காய் நகர்த்தலின் போது பாவெல் எல்ஜனோவ் வெற்றி பெற்றார்.

முதல் சுற்றின் முடிவில் ஹரிகிருஷ்ணா, பாவெல் எல்ஜனோவ் ஆகியோர் தலா ஒரு புள்ளியுடன் முதல் இரு இடங்களில் உள்ளனர். லெவோன் அரோனியன், டி.குகேஷ், சனான் சுகிரோவ், அலெக்சாண்டர் ப்ரெட்கே ஆகியோர் தலா 0.5 புள்ளிகளுடன் 3 முதல் 6-வது இடங்களில் உள்ளனர்.

7 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் இன்று நடைபெறும் 2-வது சுற்றில் குகேஷ், அர்ஜுன் எரிகைசியுடன் மோதுகிறார். ஹரிகிருஷ்ணா, அலெக்சாண்டர் ப்ரெட்கேவை சந்திக்கிறார். பாவெல் எல்ஜனோவ், சனான் சுகிரோவுடனும் லெவோன்அரோனியன், பர்ஹாம் மக்சூட்லூவுடனும் மோதுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x