Published : 15 Dec 2023 07:24 PM
Last Updated : 15 Dec 2023 07:24 PM

“பிறந்தது முதலே எனக்கு சிறுநீரக நோய் பாதிப்பு” - கேமரூன் கிரீன் அதிர்ச்சி தகவல்

கேமரூன் கிரீன்

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் வாழ்நாள் முழுவதும் நாள்பட்ட சிறுநீரக நோயால் அவதிப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.

சேனல் 7-ல் முதன் முதலாக தன் நோயைப் பற்றி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார் கேமரூன் கிரீன். மேலும் தன் பெற்றோர் தான் பதின்ம வயதைத் தாண்டுவேனோ மாட்டேனோ என்று அச்சத்துடன் இருந்ததாகவும் கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார். “நான் பிறந்தபோதே என் பெற்றோரிடம் மருத்துவர்கள் என் சிறுநீரக பாதிப்பு பற்றி கூறிவிட்டனர். நாள்பட்ட ஆயுள் சிறுநீரக வியாதி உள்ளது என்று கூறிவிட்டனர். மற்ற சிறுநீரகங்கள் போல் என் கிட்னி ரத்தத்தை வடிக்கட்டி சுத்தம் செய்யவில்லையாம். 60% தான் சிறுநீரகம் செயல்படுகிறது, இது ஸ்டேஜ் 2 என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆனால், இத்தகைய சிறுநீரக நோய் இருந்தும், அது என்னை உடல் ரீதியாக முடக்கிப் போட்டு விடவில்லை என்பது என் அதிர்ஷ்டமே. சிறுநீரக நோயில் 5 கட்டங்கள் உள்ளன. முதல் கட்டம் கடுமை குறைவான கட்டம். ஸ்டேஜ் 5 என்பது கிட்னி மாற்று அறுவை சிகிச்சை அல்லது ரத்த சுத்திகரிப்பு டயாலிசிஸ் சிகிச்சை ஸ்டேஜ் ஆகும். அதிர்ஷ்டவசமாக நான் ஸ்டேஜ் 2-ல் இருக்கிறேன். நான் சரியாக அதைக் கவனித்து வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கத் தவறினால் கிட்னி நிச்சயம் சீரழிந்து விடும்.

ஒருமுறை கிட்னி பாதிக்கப்பட்டு விட்டால் அதை மாற்ற முடியாது. அதை மீண்டும் நல்ல நிலைமைக்குத் திருப்ப முடியாது. நாம் என்ன செய்ய முடியும் என்றால் கிட்னி செயல்பாடு மேலும் சீரழியாமல் காக்க முடியும். அதன் பாதிப்புகள் மேலும் வளராமல் தடுத்துக் காக்க முடியும் அவ்வளவே. நான் என் உடல் நிலை குறித்து கிரிக்கெட் நண்பர்கள் சிலரிடம் தெரிவித்திருக்கிறேன்.

ஆஸ்திரேலிய அணியினரிடத்தில் நான் என்னைப்பற்றி கூறியிருக்கிறேன். அனைவருக்கும் என் நிலை தெரியும். சில பல தசைப்பிடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நான் அவர்களிடம் இதைத் தெரிவிக்க முற்பட்டேன். நான் தொழில்முறையாக இல்லை என்பது காரணமல்ல, அதற்கும் மேற்பட்ட உடலியல் காரணம் என்பதை நான் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதனால் மற்ற ஆஸ்திரேலிய வீரர்களிடம் என் நிலைமையைக் கூறிவிட்டேன்” என்றார் கேமரூன் கிரீன்.

வாசிம் அக்ரம் நீரிழிவு நோய்க்கு இன்சுலின் எடுத்துக் கொள்ளும் நிலைமையில்தான் வேகப்பந்து வீசினார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் நாள்பட்ட ஆயுள் கிட்னி பாதிப்பு என்பது மிகப்பெரிய ஒரு பாதகம், கிரீன் அதிலிருந்து மீள முடியாது என்று கூறுகிறார். மேலும் சீரழியாமல் தடுக்கலாம் என்று ஒரு மருத்துவ ஆலோசனையையும் கிரீன் இதன் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆடும் அளவுக்கு அவர் உயந்திருக்கிறார். கடினமாக உழைத்திருக்கிறார் என்பது அவரது சோகத்திலும் நிகழ்ந்த ஒரு ஆச்சரியமே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x