Published : 23 Jan 2018 05:46 PM
Last Updated : 23 Jan 2018 05:46 PM

ஸ்லிப்பில் இந்திய அணி அதிக கேட்ச்களை விடுவது ஏன்? - டேரில் கலினனின் அலசல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி தொடரை இழந்ததற்கு கேட்ச்களை விடுவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது, குறிப்பாக ஸ்லிப் கேட்சிங்கில் இந்திய வீரர்களுக்கு சொல்லிக் கொடுக்க முறையான பீல்டிங் பயிற்சியாளர்கள் இல்லை. ஆனால் செய்யும் தவறு அடிப்படைத் தவறுகளே என்கிறார் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேரில் கலினன்.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ செய்தியாசிரியர் சித்தார்த் மோங்காவிடம் டேரில் கலினன் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இதோ:

ஸ்லிப்பில் இந்திய பீல்டர்கள் கால்களைப் பறத்தி வைத்துக் கொள்கின்றனர், இது முதல் தவறு, இரு கைகளையும் முட்டியின் மேல் வைத்துக் கொள்கின்றனர் இது இரண்டாவது தவறு. கால்களைப் பறத்தி வைத்துக் கொள்ளும்போது பந்து வரும் திசையை சரியாகக் கணிக்க முடியாது. கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பர் பெனால்டி கிக்கின் போது கால்களை பறத்தியா வைத்துக் கொண்டு நிற்கிறார்?

இடது பக்கமும், வலது பக்கமும் சுறுசுறுப்பாக நகர, டைவ் அடிக்க கால்களைச் சேர்த்து வைத்து கொள்ள வேண்டும். கால்களை அகற்றி வைத்துக் கொண்டால் இடது வலது புற நகர்வின் போது தலை பந்தின் நேர் கோட்டுக்கு வராமல் தேங்கி விடும். பந்தின் பின்னால் கண்களை வைத்துக் கொண்டால் பந்தின் வேகத்தைக் கணிப்பது எளிது, மாறாக இந்திய ஸ்லிப் பீல்டர்கள் பக்கவாட்டு பார்வையில் பந்தைப் பார்க்கின்றனர். பந்து எட்ஜ் ஆகும் போது பொசிஷனுக்கு வந்து பயனில்லை, பவுலர் பந்தை விடும்போது பந்தின் லைனுக்குத் தக்கவாறு பார்வையை வைக்க வேண்டும்.

மாறாக பந்து எட்ஜ் எடுக்கும் போது கூட இந்திய ஸ்லிப் பீல்டர்களின் கால்கள் அகற்றியே வைக்கப்பட்டுள்ளது. புஜாரா தவிர அனைவருமே தங்கள் கைகளை முழங்கால் மேல் வைத்துக் கொள்கின்றனர். நான் தவண், விராட் கோலி ஆகியோரை மேட்ச் முழுதும் பார்த்தேன் முழங்கால் மேல் கைகளை வைத்துக் கொள்கின்றனர். எட்ஜ் எடுக்கும் போது கைகள் முழங்காலை விட்டு எடுக்கப்பட்டாலும் தலை பந்தின் திசைக்கு வருவதில்லை இதுதான் கேட்ச் விடக் காரணம்.

மஹராஜின் மட்டையிலிருந்து தவண் கைகளுக்கு கேட்ச் வினாடியில் செல்கிறது. தலை எப்போதும் கேமரா போல் செயல்பட வேண்டும் பந்தை படம் பிடிப்பது போன்ற நிலையில் தலை இருக்க வேண்டும். ஆனால் கைகளை முழங்கால் மேல் வைத்துக் கொண்டால் ஒரு பயனும் ஏற்படாது, கேட்ச்களை விடுவதைத் தவிர வேறு வழியில்லை. தவணின் கேட்ச் பிடிக்கும் நிலை ஸ்லிப் பீல்டர்களுக்கு உரியதல்ல. இந்திய அணி கடந்த 4 ஆண்டுகளாகவே இப்படித்தான் ஸ்லிப்பில் திகழ்கிறது, ஆட்களை மாற்றி பயனில்லை, இந்திய அணியில் ஸ்லிப் பீல்டர்களே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

இவ்வாறு கூறினார் டேரில் கலினன்.

இந்திய அணியில் சில அபாரமான ஸ்லிப் பீல்டர்கள் இருந்தனர், திராவிட், லஷ்மணைக் குறிப்பிடலாம். இவர்கள் நேராக நிற்பவர்கள், 2004 கங்குலி தலைமையில் ஆஸ்திரேலியா சென்ற போது லஷ்மணின் ஸ்லிப் பீல்டிங் வேகப்பந்து வீச்சுக்கு பெரிய பக்கபலமாகத் திகழ்ந்தது கவனிக்கத்தக்கது. புரோசஸ், புரோசஸ் என்று கூறிக்கொண்டிருந்த முன்னாள் கேப்டன் ஒரு அணியை சகலவிதங்களிலும் தயார் செய்வதில் சோடை போனவரே என்பது இதிலிருந்து தெரிகிறது. அதே நிலை கோலியின் தலைமையிலும் தொடர்கிறது. இவையெல்லாம் அடிப்படைகள். முதலில் அடிப்படைகளைச் சரி செய்ய ஆளில்லை என்பதே நிலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x