Published : 12 Dec 2023 06:27 PM
Last Updated : 12 Dec 2023 06:27 PM

ரிங்கு சிங்... இவர்தான் அடுத்த யுவராஜ் சிங்! - சுனில் கவாஸ்கர் எதிர்பார்ப்பு

ரிங்கு சிங்

இடது கை ‘புதிய பினிஷர்’ ரிங்கு சிங் இந்திய அணிக்காக தன் கிரிக்கெட் பயணத்தை அற்புதமான தொடங்கியிருப்பதாக சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சீரான முறையில் ஆடி பெயர் பெற்ற ரிங்கு சிங் இப்போது சர்வதேச அரங்கத்திலும் தன்னை நிரூபித்து வருகிறார். அட்டகாசமாக டி20 போட்டிகளில் பினிஷர் வேலையைச் செய்து வருகிறார். ஆகவே அடுத்த ஆண்டு மே.இ.தீவுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இவருக்கும் ஜிதேஷ் சர்மாவுக்கும் இடையில் பினிஷிங் இடத்திற்காக கடும் போட்டி ஏற்படும் என்று தெரிகிறது. இதுவரை ரிங்கு சிங் விளையாடிய 55 லிஸ்ட் ஏ போட்டிகளில் 1844 ரன்களை 49.83 என்ற அபாரமான சராசரியில் எடுத்துள்ளார். 42 முதல் தரப் போட்டிகளில் 3007 ரன்களை விளாசியுள்ளார் ரிங்கு சிங். சராசரி 57.82.

இந்நிலையில், சுனில் கவாஸ்கர், இவரைப் பற்றி பாராட்டிப் பேசியுள்ளார். தனக்கான இந்தப் பெயரைச் சம்பாதிக்க ரிங்கு சிங் கடினமாக உழைத்திருப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். “திறமை என்பது எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. நீங்கள் கிரிகெட்டை நேசிக்கலாம். நாள் முழுதும் ஆடிக்கொண்டே இருக்கலாம், ஆனால் இவையெல்லாம் போதிய திறமையை கொடுத்து விடுமா என்பது சந்தேகமே. ஆனால், ரிங்கு சிங்கிடம் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதைத்தான் அவர் கடந்த 2-3 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். இத்தனைக்கும் ஐபிஎல் தொடரில் கூட இவர் ஆடிய அணிகளில் அணிக்கு உள்ளும் வெளியும் இருந்து வந்திருக்கிறார். சீரான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கடைசியாக இடம் கிடைக்க அதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு விட்டார் ரிங்கு சிங்” என்றார் சுனில் கவாஸ்கர்.

ஐபிஎல் 2023-ல் ரிங்கு சிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 474 ரன்களை 59.25 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 150 என்ற அபார வேகத்தில் ரன்களை எடுத்து வந்துள்ளார். கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசி தன் அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தது முதல் இவர் பெயர் உச்சமடைந்தது.

யுவராஜ் சிங் சாதித்ததில் ஒரு துளி ரிங்கு சிங் சாதித்தாலே ரிங்கு சிங் இந்தியாவுக்காக ஆடிய பெருமையை பெற்று விடுவார் என்கிறார் சுனில் கவாஸ்கர். “இப்போது இந்திய அணியில் ஆடுகிறார் ரிங்கு சிங், அவர் ஆடும் விதம் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. இப்போது இவரை இன்னொரு யுவராஜ் சிங் என்பதாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர். இந்திய கிரிக்கெட்டுக்கு யுவராஜ் செய்ததில் ஒரு துளியை ரிங்கு சிங் செய்தாலே போதும் ரிங்கு சிங் அபாரமாக தன் பணியைச் செய்ததாக அர்த்தம்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x