Published : 12 Dec 2023 07:14 AM
Last Updated : 12 Dec 2023 07:14 AM
லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 5 டெஸ்ட்கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் 16 பேர்கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் அறிமுக வீரர்களாக 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணிஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டம் ஜனவரி 25-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதில் அறிமுக வீரர்களாக ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி, கஸ் அட்கின்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் டாம்ஹார்ட்லி, ஷோயப் பஷீர் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்கள். இவர்களுடன் ஜாக் லீச், ரெஹான் அகமது ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர். 20 வயதான ஷோயப் பஷீர் கடந்த ஜூன் மாதம்சோமர்செட் அணிக்காக முதல்தர கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி 10 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
வேகப்பந்து வீச்சாளர் கட் அட்கின்சன், டாம் ஹார்ட்லி ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாடி உள்ளனர். தற்போது டெஸ்ட் போட்டிக்கான அணியில் நுழைந்துள்ளனர். காயத்தில்இருந்து மீண்டுள்ள துணை கேப்டன் ஆலி போப் அணிக்கு திரும்பி உள்ளார். ஆஷஸ் தொடரில் நீக்கப்பட்டிருந்த விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டிக்கு முன்னதாக அவர், முழு உடற்தகுதியை அடைந்து விடுவார் எனவும் இருப்பினும் அவர்,பந்து வீச மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சில் 41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் மார்க் வுட், ஆலி ராபின்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஷோயப் பஷீர், ஹாரிபுரூக், ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வுட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT