Published : 28 Jan 2018 06:00 PM
Last Updated : 28 Jan 2018 06:00 PM
மெல்போர்னில் நடந்து வந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
கிராண்ட்ஸ்லாம் பிரிவில் பெடரர் வெல்லும் 20-வது பட்டம் இதுவாகும். ஆஸ்திரேலியன் ஓபனில் 6-வதுமுறையாக கோப்பையை வெல்கிறார்.
கடந்த 2012ம் ஆண்டுக்கு பின், டென்னிஸ் உலகில் பெடரர் வாழ்க்கை அஸ்தமித்துவிட்டது என்று எண்ணியவர்களுக்கு கடந்த ஆண்டில் இருந்து பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்து பெடரர் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து வருகிறார்.
கடந்த 12 நாட்களுக்கு மேலாக மெல்போர்ன் நகரில் நடந்து வந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் முடிவுக்கு வந்துவிட்டது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில், நம்பர் ஒன் வீரரும், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவருமான ரோஜர் பெடரரை எதிர்கொண்டார் குரோஷிய வீரர் மரின் சிலிக்.
3 மணி நேரம் 30 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில், மரின் சிலிக்கை 6-2, 6-7(5/7), 6-3, 3-6, 6-1 ஆகிய செட்களில் போராடி வீழ்த்தினார் ரோஜர் பெடரர்.
முதல் செட்டை எளிதாகக் கைப்பற்றிய பெடரருக்கு அடுத்த செட்டில் டைபிரேக்கர் வரை சென்று மரின் சிலிக் அதிர்ச்சி அளித்தார். இதைபோலவே 3-வது, 4-வது செட்டிலும் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நீடித்தது. வெற்றியாளரை முடிவு செய்யும் 5-வது செட்டில் பெடரர் ஒரு செட் மட்டும் விட்டுக்கொடுத்து கோப்பையை தனதாக்கினார்.
இந்த ஆட்டத்தில் பெடரர் சர்வீஸ்களில் 24 ஏஸ்களை செலுத்தி மரின்சிலிக்கை திணறடித்தார். ஆனால், மரின் சிலிக் 16 ஏஸ்கள் மட்டுமே செலுத்தினார். அதேபோல பந்தை திருப்பி அனுப்புவதில் பெடரரைக் காட்டிலும் மரின் சிலிக் 64 தவறுகள் செய்ததால், வெற்றி எளிதாக பெடரர் பக்கம் சென்றது.
இதுவரை ரோஜர் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளார். அதில் ஆஸ்திரேலியன் ஓபனில் 6 பட்டம், யு.எஸ். ஓபனில் 5 முறை கோப்பை, விம்பிள்டனில் 8 முறை மகுடம், பிரெஞ்சு ஓபனில் 2009ம் ஆண்டு மட்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
இதன் மூலம் 20 மற்றும் அதற்கு அதிகமாக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் மார்க்கிரட் கோர்ட், செரீனா வில்லியம்ஸ், ஸ்டெபி கிராப் ஆகியோர் வரிசையில் 4-வது வீரராக பெடரர் இணைந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT