Published : 17 Jan 2018 03:54 PM
Last Updated : 17 Jan 2018 03:54 PM

2வது டெஸ்ட் போட்டி: நிகிடி வேகத்தில் வீழ்ந்த இந்தியா, தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

287 ரன்கள் டார்க்கெட்டை விரட்டிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவிலேயே 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று இந்தியாவுக்கு தோல்வியா, ட்ராவா என்ற எதிர்பார்ப்பே பலரிடம் இருந்தது. புஜாரா, பார்த்தீவ் படேல் இருவரும் ஜாக்கிரதையாகவே ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

நாளின் ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களிலேயே ஃபிலாண்டரின் பந்தை பார்த்தீவ் படேல் கல்லி பகுதியில் தட்டி விட 3 ரன்கள் எடுக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் டிவில்லியர்ஸின் துல்லியமான ஃபீல்டிங், அதிவெக த்ரோவை எதிர்பார்க்காத புஜாரா 3 ரன்னை முடிக்கும் முன் ரன் அவுட் ஆனார். முதல் இன்னிங்ஸிலும் இவர் ரன் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் ரன் அவுட் ஆன ஒரே இந்திய வீரர் என்ற 'பெருமை'யையும் புஜாரா பெற்றார்.

அடுத்த சில ஓவர்களில் பார்த்தீவ் படேல் (19 ரன்கள்), பாண்டியா (6 ரன்கள்), அஸ்வின் (3 ரன்கள்) என இந்திய வீரர்கள் சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்பினர். ரோஹித் சர்மா மட்டுமே ஒரு பக்கம் தாக்குப் பிடித்து ஆடிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 100 ரன்களையாவது எட்டுமா என்ற நிலை இருந்தது. ஆனால் களத்தில் இருந்த இரு வீரர்களும், சற்றே தங்கள் ஆட்டத்தின் தன்மையை மாற்றி, கிடைத்த மோசமான பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விரட்டி 100 ரன்களை கடக்கச் செய்தனர்.

எதிர்பாராத விதமாக ரோஹித் சர்மா - ஷமி ஜோடி சிறிது நேரம் நிலைத்து ஆடி ரன் சேர்க்க ஆரம்பித்தது. பவுண்டரிகளும் மாறி மாறி வர பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தது. ரோஹித் சர்மா அரை சதத்தை நெருங்க, 47 ரன்கள் எடுத்திருந்த போது ரபாடா வீசிய பந்தில் டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 24 பந்துகளீல் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்திருந்த ஷமி அடுத்த ஓவரில் நிகிடியின் வேகத்தில் வீழ்ந்தார்.

அடுத்த ஒரு ஓவர் இந்திய வீரர்கள் தாக்குப்பிடிக்க, நிகிடி தனது அடுத்த ஓவரில் பும்ராவை வெளியேற்றினார். 135 ரன்களில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளை தென்னாப்பிரிக்கா வென்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

டேல் ஸ்டெய்னுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டு தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே நிகிடி முதல் இன்னிங்ஸில் 1, இரண்டாவது இன்னிங்ஸில் 6 என மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x