Published : 07 Dec 2023 12:43 AM
Last Updated : 07 Dec 2023 12:43 AM
டர்பன்: டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் ஜான்சன் இடையிலான கருத்து வேறுபாட்டை இருவரும் பேசி தீர்வு காண வேண்டும் என டிவில்லியர்ஸ் வலியுறுத்தி உள்ளார். வார்னரை ஏன் ஒரு நாயகனை போல கொண்டாட வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன் தெரிவித்திருந்தார்.
அதோடு வார்னரை பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்த்தது ஏன் என்றும், அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபேர்வெல் போட்டி அவசியம்தானா என்றும் ஜான்சன் விமர்சித்திருந்தார். இதனை பாட்காஸ்ட் மூலமாக அவர் தெரிவித்திருந்தார். முக்கியமாக கடந்த 2018-ல் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்தும், வர்னரின் தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்ம் குறித்தும் அவர் பேசியுள்ளார். பொதுவெளியில் அவர் வைத்த இந்த விமர்சனத்தை அடுத்து வார்னருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
“பொதுவெளியில் இப்படி பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. போனை எடுத்து அவருக்கு அழைப்பு மேற்கொண்டு, இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்து, பேசி தீர்க்க வேண்டும். இருவருக்கும் இடையில் மன கசப்பு இருந்திருக்கலாம் என கருதுகிறேன். வார்னர் உடன் இணைந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளேன். அவர் களத்தில் மிருகத்தனமாக இயங்குவார். ஆனால், களத்துக்கு வெளியில் மிகவும் மென்மையானவர். அவருடன் விளையாடியவர் என்ற முறையில் இதை சொல்கிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக நாங்கள் இணைந்து விளையாடி உள்ளோம்” என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரியில் (2024) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தார் வார்னர். அது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடராக இருக்கும் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதுவே நடந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT