Published : 06 Dec 2023 06:16 AM
Last Updated : 06 Dec 2023 06:16 AM
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் நாகாலாந்து அணியை 69 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த தமிழ்நாடு அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று நாகாலாந்துடன் மோதியது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நாகாலாந்து அணியானது வருண் சக்ரவர்த்தி, சாய் கிஷோர் ஆகியோரது சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சுமித் குமார் 20, யோசுவா ஓசுகம் 13 ரன்கள் சேர்த்தனர். இவர்களை தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.
ஷாம்வாங் வாங்னாவ் 1, ஓரேன் நகுல்லி 1, கேப்டன் ரோங்சென் ஜொனாதன் 5, ஹோகைட்டோ ஜிமோமி 1, தஹ்மீத் ரஹ்மான் 1, அகாவி யெப்தோ 3, கரண் டெவாட்டியா 4, க்ரிவிட்சோ கென்ஸ் 0 ரன்களில் நடையை கட்டினர். பந்து வீச்சில் தமிழக அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி 5 ஓவர்களை வீசி 3 மெய்டன்களுடன் 9 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
சாய் கிஷோர் 5.4 ஓவர்களை வீசி 21 ரன்களை வழங்கி 3 விக்கெட்கள் கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர்களான சந்தீப் வாரியர், நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
70 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தமிழ்நாடு அணி 7.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாய் கிஷோர் 25 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்களும், நாராயண் ஜெகதீசன் 22 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தமிழ்நாடு அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள தமிழ்நாடு அணி ஒரு தோல்வி, 5 வெற்றிகளுடன் 20 புள்ளிகள் குவித்து தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment