Last Updated : 31 Jan, 2018 07:34 PM

 

Published : 31 Jan 2018 07:34 PM
Last Updated : 31 Jan 2018 07:34 PM

நம்பர் 1 தெ.ஆ., நம்பர் 2 இந்தியா: சவாலான ஒருநாள் தொடர் டர்பனில் தொடங்குகிறது!

டர்பனில் நாளை (வியாழனன்று) இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் போட்டி (மொத்தம் 6 ஒருநாள் போட்டிகள்) பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

சர்ச்சைகளும், அணித்தேர்வு குளறுபடிகளும் மலிந்த டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியை வென்று இந்திய அணி இழந்த மதிப்பை மீண்டும் பெற்றதையடுத்து ஒருநாள் தொடரில் இந்திய அணி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது, டெஸ்ட் போட்டித் தொடரில் நம்பர் 1 இந்திய அணியுடன் மோதிய தென் ஆப்பிரிக்கா, தற்போது தன் நம்பர் 1 நிலையுடன் 2-ம் இடத்தில் உள்ள இந்திய அணியை எதிர்கொள்கிறது.

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் பலம் வேறு விதமானது, ரோஹித், தவண், கோலி என்ற முதல் 3 வீரர்கள் பெரும்பாலான போட்டிகளை சமீபகாலமாக வெற்றி பெற்று கொடுத்துள்ளனர். ஒரு வீரர் இல்லாவிட்டாலும் இன்னொரு வீரர் என்ற ரீதியில் அணியில் சேர்க்கை வலுவாக உள்ளது. முதல் 3 வீரர்களுடன் கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே, தோனி, ஹர்திக் பாண்டியா என்று வலுவான பேட்டிங் லைன் அப் உள்ளது, பந்து வீச்சில் அதே போல் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி அல்லது உமேஷ் யாதவ், குல்தீப், சாஹல் என்று ஒரு வெற்றிக்கூட்டணியாக உள்ளது.

பவுன்ஸ் பிட்சாக இருந்தாலும் வறண்ட பிட்சாக இருந்தாலும் தென் ஆப்பிரிக்காவில் சமீபகாலங்களில் அதிக ரன்கள் குவிக்கப்படும் போட்டிகளாக அமைகிறது. புதிய பந்து கொஞ்சம் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகும், அதனால் முதல் 10-15 ஓவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இல்லையெனில் அன்று இங்கிலாந்து அடிலெய்ட் பவுன்ஸ், ஸ்விங் பிட்சில் 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது போல் ஆகிவிடும் அபாயம் உள்ளது.

2019 உலகக்கோப்பையை வெல்ல கடுமையாக தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தென் ஆப்பிரிக்கா இந்தத் தொடரில் நிச்சயம் கடும் சவாலை அளிக்கும் என்பது உறுதி, இந்தியா தரப்பில் கொஞ்சம் சவுகரியமான விஷயம் டிவில்லியர்ஸ் முதல் 3 போட்டிகளுக்கு ஆட முடியாமல் போனது. இது காரண காரியத் தொடர்புள்ளதா அல்லது இடுகுறிமை உள்ளதா என்பது தெரியவில்லை.

2015-ல் தென் ஆப்பிரிக்கா இங்கு வந்து ஒருநாள் தொடரில் வென்றது தீராக்காயமாக இந்திய அணிக்கு இருக்கும், அதனால் அதற்குப் பழிக்குப்பழி தொடர் வெற்றி என்ற குறிக்கோளில் கோலி படை இறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

புள்ளி விவரங்கள் அடிப்படையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அங்கு இந்தியா 28 ஒருநாள் போட்டிகளில் 5-ல் மட்டுமே வென்றுள்ளது, டர்பனில் வென்றதில்லை.

102 ரன்கள் எடுத்தால் மகேந்திர சிங் தோனி ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் எடுக்கும் 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

ஆட்டம் நாளை மாலை 4.30 மணிக்குத் தொடங்குகிறது.

இந்திய அணி (உத்தேசமாக): ரோஹித் ஷர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, ரஹானே அல்லது பாண்டே, தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி அல்லது உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சாஹல்

தென் ஆப்பிரிக்கா அணி (உத்தேசமாக): ஆம்லா, டுபிளெசிஸ், டி காக், அய்டன் மார்க்ரம், ஜே.பி.டுமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ஆண்டில் பெலுக்வயோ, ரபாடா, மோர்கெல், இம்ரான் தாஹிர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x