Published : 30 Nov 2023 08:00 PM
Last Updated : 30 Nov 2023 08:00 PM
மும்பை: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 1,25,000 இந்திய ரசிகர்கள், ஆர்ப்பரிக்கும் நீலக்கடல் அலையை அமைதியாக்குவோம் என்று 2023 உலகக் கோப்பை இறுதிக்கு முன் கூறிய பாட் கம்மின்ஸ் சொன்னதைச் செய்தார். குறிப்பாக, விராட் கோலி அவுட் ஆன தருணத்தை ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கம்மின்ஸ் நினைவுகூர்ந்தார்.
இறுதிப் போட்டியின் 29-வது ஓவரை பாட் கம்மின்ஸ் வீசினார். கோலி 54 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தார். கம்மின்ஸ் வீசிய 3-வது பந்து இந்திய ரசிகர்களின் இதயத்தை சுக்கு நூறாக்கிவிட்டது. சற்றே ஷார்ட் ஆக பிட்ச் ஆன பந்து ஆஃப் ஸ்ட்ம்பை நோக்கி உள்ளே வந்தது, கோலிக்கு ரூம் இல்லை, மட்டையில் பட்டு பவுல்டு ஆனார். ரசிகர்கள் தலையில் இடியே விழுந்து விட்டது போல் அமைதியாயினர். பேரமைதி நிலவியது. இந்தத் தருணம் பற்றி பாட் கம்மின்ஸ் கூறியது: “கோலியின் விக்கெட் விழுந்தவுடன் நாங்கள் பிட்சில் ஒன்று கூடினோம். அப்போது ஸ்டீவ் ஸ்மித் சொன்னார், ‘ரசிகர்களைக் கவனியுங்கள்’ என்றார். நாங்களும் கொஞ்ச நேரம் சத்தமின்றி ரசிகர்களை கவனித்தோம். ஆம்! லைப்ரரி போல் ஆகிவிட்டது ஒட்டுமொத்த மைதானமும்... நீலக்கடல் ஓய்ந்தது. ஒரு லட்சம் இந்தியர்களும் மவுனமானார்கள். அந்தத் தருணத்தை நான் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்துக் கொள்வேன். மறக்க முடியாத மறக்கக் கூடாத தருணம்.
நான், வாழ்க்கையில் ஒருமுறையே வாய்க்கும் வாய்ப்பு இது என்று உறுதியாக இருந்தேன், இன்று என்ன நடந்தாலும் சிறப்பு வாய்ந்த நாள் என்று முடிவெடுத்தேன். முழுவதும் நீலக்கடல், இது ஐபிஎல் ரசிகர்கள் கூட்டமல்ல. ஐபிஎல் போட்டிகளிலாவது சாதாரண உடைகளில் பலரைக் காண முடியும். ஆனால், இங்கு அனைவரும் நீலக்கலர் உடையை அணிந்திருந்தனர். அப்போது இந்தக் கூட்டத்தை சற்றே அமைதிக்கும் மவுனத்துக்கும் தள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
கிரிக்கெட் ஒரு வேடிக்கையான ஆட்டம், மரபான விஷயம் என்னவெனில் இறுதிப் போட்டியா, முதலில் பேட் செய்ய வேண்டும். இத்தனைக்கும் கடைசி 5 ஒருநாள் போட்டி இறுதிப் போட்டிகளில் முதலில் பீல்டிங் செய்த அணிகள்தான் வென்றிருக்கின்றன. நானும் பவுலிங் எடுத்தேன், இதுதான் கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு மிகப் பெரிய வேடிக்கை” என்றார் பாட் கம்மின்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT