Published : 06 Jan 2018 05:30 PM
Last Updated : 06 Jan 2018 05:30 PM

தென் ஆப்பிரிக்காவை கலங்கடித்த பாண்டியா 7 ரன்களில் சதத்தை இழந்தார்: இந்தியா 209 ஆல் அவுட்

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் அனைத்து நம்பிக்கைகளும் இழந்து விட்ட நிலையில் ஹர்திக் பாண்டியா உறுதியை இழக்காமல் எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸை ஆடி தென் ஆப்பிரிக்காவைக் கலங்கடித்து 93 அதிரடி ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அவரும் புவனேஷ்வர் குமாரும் இணைந்து 99 ரன்களைச் சேர்த்து தென் ஆப்பிரிக்க பவுலர்களை கதிகலங்கடித்தனர். புவனேஷ்வர் குமார் ஹர்திக் பாண்டியாவுக்கு உறுதுணையாக ஆடி 86 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து மோர்கெல் பந்தை அனாவசியமாக ஆடி குவிண்டன் டி காக்கிடம் ஆட்டமிழந்தார்.

ஹர்திக் பாண்டியாவின் எதிர்த்தாக்குதல்:

விருத்திமான் சஹா ரன் எடுக்காத நிலையில் டேல் ஸ்டெய்ன் நேர் பந்தை ஆடாமல் விட முடிவெடுக்க கால்காப்பைத் தாக்கியது பிளம்ப் எல்.பி. தேவையில்லாமல் ரிவியூ செய்தார். அவுட் என்பதால் இந்தியா ரிவியூவை இழந்தது.

ஆனால் இந்த ரிவியூவுக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா 5 ரன்களில் இருந்த போது பந்து எட்ஜ் ஆனதாக நடுவர் அவுட் கொடுக்க பாண்டியா சரியாக ரிவியூ செய்தார், அது வலது இடுப்புப் பகுதியில் பட்டுச் சென்றது தெரியவர நாட் அவுட் ஆனது. பிறகு ஒரு ஸ்டெய்ன் பந்தை அவர் பின்னால் சென்று டிரைவ் ஆட முயல எட்ஜ் ஆனது, ஆனால் கல்லியில் எல்கரால் கேட்ச் விடப்பட்டது. பிறகு பாண்டியா எதிர்த்தாக்குதல் ஆடத் தொடங்கிய பிறகு மஹராஜ் பந்தில் டி காக் ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டை விட்டார். டிகாக் பந்தை சரியாகச் சேகரிக்கவில்லை.

இந்த வாய்ப்புகளை அருமையாகப் பயன்படுத்திய ஹர்திக் பாண்டியா, நம்பிக்கையற்ற சூழலில் ஒரு அபாரமான எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸை ஆடி தென் ஆப்பிரிக்காவை சில மணி நேரங்கள் கலங்கடித்தார்.

அவரது ஷாட்கள் ஒரு வர்ணனைக்குத் தகுதியானதே. முதலில் ஸ்டெய்னை ஒரு அபாரமான பிளிக்-பஞ்ச் ஷாட் மிட்விக்கெட்டில் பவுண்டரி.

அதன் பிறகுதான் சஹா அவுட் ஆனார். பிறகுதான் பிலாண்டர் 43-வது ஓவரை வீச வந்தார். முதல் ஃபுல் பந்தை மிட் ஆஃப் மேல் தூக்கி அடித்தார் அபாரமான நான்கு ரன்களானது. பிறகு பின்னால் சென்று அருமையாக பாயிண்டில் தட்டி விட்டு ஒரு பவுண்டரி, இதற்கு அடுத்து அடித்த ஷாட், ஷாட் ஆஃப் த இன்னிங்ஸ் என்றுதான் கூற வேண்டும், மேலேறி வந்து பந்தை அருமையாக பிளிக் செய்தார் பந்து மிட் ஆன், மிட்விக்கெட் இடையே அலறியது. ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசி எதிர்த்தாக்குதலை நடத்தத் தொடங்கினார்.

பிறகு மோர்கெலை கவர் திசையில் ஒரு அப்பு அப்பினார் இன்னொரு பவுண்டரி. மோர்கெல் ஷார்ட் பிட்ச் பந்துக்குத் திரும்ப உடம்பை பின்புறம் வளைத்து ஒரு அப்பர் கட் செய்தார் பவுண்டரி. பிறகு ஒரு ஷார்ட் ஆஃப் லெந்த் பந்தை பாயிண்டில் அறைந்தார் பாண்டியா 47 ரன்களுக்கு வந்தார். பிறகு அடித்த ஷாட் உண்மையில் மோர்கெலை கலங்கவே அடித்திருக்கும், ஷார்ட் பிட்ச் ஆஃப் ஸ்டம்ப் எகிறு பந்தை சற்றே பின் வாங்கி மிட் ஆஃப், எக்ஸ்ட்ரா கவருக்கு மேல் ஒரு டென்னிஸ் சர்வீஸ் ஷாட் அடித்தார் பவுண்டரிக்குப் பந்து பறக்க 49 பந்துகளில் 51 ரன்கள் என்று அரைசதம் கடந்தார்.

ரபாடா 145 கிமீ வேகம் வீசுபவர், அவர் வந்தவுடன் விக்கெட் கீப்பர் மேல் இன்னொரு பவுண்டரி விளாசினார்.பிறகு மோர்கெலை ஒரு ஷார்ட் ஆர்ம் புல் பவுண்டரிக்குச் செல்ல புவனேஷ்வர் குமார், பாண்டியா அரைசதக் கூட்டணியில் பாண்டியா மட்டுமே 47 ரன்கள் எடுத்தார். ஆனால் ஆட்டத்தின் போக்குக்கு எதிராக ரபாடாவை ஒரு கவர் டிரைவ், ஒரு லெக் கிளான்ஸ் என்று புவனேஷ்வர் குமார் 2 பவுண்டரிகளை அடித்தார். பிறகு மஹராஜ் வந்தார், இறங்கி வந்து மிட்விக்கெட்டில் பாண்டியா சிக்ஸ். அடுத்த பந்துதான் டிகாக் ஸ்டம்பிங் வாய்ப்பைக் கோட்டை விட்டார். பிறகு அதே ஓவரில் ஒரு காட்டு ஸ்வீப் செய்து மிட்விக்கெட் பவுண்டரிக்கு அனுப்பினார் பாண்டியா. பாண்டியா 75 ரன்களைக் கடந்த பிறகு 4-5 ஓவர்கள் பவுண்டரி வரவில்லை. குமார் அதிக பந்துகளை எதிர்கொண்டார். புவனேஷ்வர் குமார் 25 ரன்களில் மோர்கெல் பந்தை எட்ஜ் செய்து வெளியேற, மோர்கெலை கவர் திசையில் ஒரு காட்டு புல்ஷாட்டில் 90-களுக்குப் புகுந்தார். ரபாடா ரவுண்ட் த விக்கெட்டில் பாடி லைன் பவுலிங்கில் இறங்க ஒரு பந்து பாண்டியாவின் வயிற்றை செமயாக பதம் பார்த்தது. கடைசியில் 93 ரன்களில் ரபாடாவின் இன்னொரு ஷார்ட் பிட்ச் பந்தை வெளுக்கும் முயற்சியில் கூடுதல் வேகம் மற்றும் பவுன்சினால் கேட்ச் ஆகி வெளியேறினார். நம்பிக்கையற்ற தருணத்தில் கபில்தேவ் ஆடுவாரே அது போன்ற அணியின் உணர்வுகளைத் தூண்டும் இன்னிங்ஸ் ஆகும் இது.

ஆனால் சதம் எடுக்கும் தறுவாயில் கூட தன்னலமற்ற ஒரு ஷாட்டைத்தான் ஆடினார் பாண்டியா, அதில் ஆட்டமிழந்தார். உண்மையில இது ஒரு மகா இன்னிங்ஸ்.

இந்திய அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் பிலாண்டர், ரபாடா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்டெய்ன், மோர்கெல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். டேல் ஸ்டெய்ன் குதிகால் ஸ்கேனுக்காகச் சென்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 77 ரன்கள் முன்னிலை பெற்று, இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியுள்ளது.

முன்னதாக

கடின உழைப்புக்குப் பிறகு புஜாரா தேவையற்ற அவுட்:

கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி. உணவு இடைவேளைக்குப் பிறகு புஜாராவை 26 ரன்களில் பிலாண்டர் வீழ்த்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சில் வேகம், துல்லியம் தவிர இந்திய அணிக்கு ரன் எடுக்க வாய்ப்பே அளிக்கவில்லை, இன்றைய முதல் ரன்னே 24 டாட் பால்களுக்குப் பிறகே வந்தது.

கேஜியோ ரபாடா தன் வேகம், லெந்த்தின் துல்லியம் என்று இந்திய பேட்ஸ்மென்களை கடும் அவதிக்குள்ளாக்கினார். 146-150 கிமீ வேகத்தில் வீசுகிறார், இதனால் அவரை பின் காலில் சென்று எதிர்கொள்வதே சிறந்தது, ஆனால் 145-146 கிமீ வேகத்தில் அவர் ஃபுல் லெந்தில் வீசுகிறார். காற்றில் பந்து கடும் வேகத்துடன் வருகிறது. ரோஹித் சர்மாவுக்கு சட்டென முன் கால், பின் கால் என்று முடிவெடுக்க முடியவில்லை, இதனால் இன்றைய தின 18-வது ஓவரில் இன்ஸ்விங்கரில் கால்காப்பில் வாங்கினார், ரபாடா வேகத்துக்கு ஏற்ப மட்டையை கீழே இறக்க முடியவில்லை, தாமதமானது, இதனால் பிளம்ப் எல்.பி.ஆகி 59 பந்துகளில் ஒரேயொரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்..

இன்று காலை வெர்னன் பிலாண்டர் 5 தொடர் மெய்டன்களுடன் தொடங்கினார். டேல் ஸ்டெய்ன் மெதுவே தனது அபாயகரமான அவுட் ஸ்விங்கரைக் கண்டுபிடித்து வருகிறார். மோர்னி மோர்கெல் அசவுகரியான லெந்தில் பந்தை எழுப்புவதும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு பழக்கமில்லாத ஒன்று. கம்பீர் போன்ற வீரர்கள் அங்கும் இங்கும் அடி வாங்கி இத்தகைய சூழ்நிலைகளில் எடுத்த 93 ரன்களை நினைத்துப் பார்ப்பது நலம்.

புஜாரா மிக அருமையான நிதானத்துடன் ஆடுகிறார், அனாயசமாக ஆடுகிறார் என்று கூற முடியாது, ஆனால் குறிக்கோள் இருக்கிறது, விக்கெட்டை அவ்வளவு சுலபத்தில் கொடுத்து விடக்கூடாது என்பது தெரிகிறது, பெரும்பாலும் ஸ்கொயர் லெக்கில்தான் இவரது 26 ரன்கள் வந்தது. கவர் திசையில் 2 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார் என்றால், ஆஃப் திசையே எனக்கு வேண்டாம் என்கிற பேட்டிங்காகும் இது. ஆனாலும் என்ன செய்வது உணவு இடைவேளைக்குப் பிறகு பிலாண்டரின் வெளியே சென்ற பந்தை தேவையில்லாமல் ஆடி டுபிளெசிசிடம் ஆட்டமிழந்தார். அத்தனை கடின உழைப்பும் வீண்.

ரோஹித் ஆட்டமிழந்தவுடன் அஸ்வின் இறங்கினார், ரபாடாவின் ஒரு பவுன்சர் பந்து வலது கை விரல்களில் ‘பச்’ என்று தாக்கியது, கிளவ்வை கழற்றி விட்டு உதறி மருந்து கிருந்தெல்லாம் போட்ட பிறகு அடுத்த பந்து இடது கை விரல்களைப் பதம்பார்த்து பவுண்டரிக்குச் சென்றது. மீண்டும் இருகைகளையும் உதறல். அவர் உறுதியுடன் 12 ரன்களில்  ஆடி வந்த நிலையில் பிலண்டர் பந்தை தொட்டார் கெட்டார்.  சஹா 0-வில் ஸ்டெய்ன் பந்தை ஆடாமல் விட்டு எல்.பி. ஆனார்.

கடைசியில் பாண்டியாவின் அதி அற்புத மகா இன்னிங்ஸ், குமாரின் உறுதுணை இன்னிங்ஸ், மற்றும் கூட்டணியினால் இந்திய அணி மீண்டும் பதில் கொடுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x