Published : 28 Nov 2023 10:49 AM
Last Updated : 28 Nov 2023 10:49 AM
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெளியே சொல்லப்படாத, சொல்லக் கூடாத ஒரு தொகைக்கு ஹர்திக் பாண்டியாவை அவரது சம்மதத்துடன் மும்பை இந்தியன்ஸிற்கு விற்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம். வீரர்கள் பரிமாற்றம் அல்லது வீரர்கள் விற்பனை எப்படி நிகழ்கிறது என்பதைப் பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம்.
இது போன்ற வீரர்கள் பரிமாற்றம், வீரர்களை விற்பது என்பது கால்பந்து தனியார் லீக்குகளிலிருந்து ஐபிஎல் தத்தெடுத்துக் கொண்ட நடைமுறையாகும். ஒரு ஐபிஎல் அணியிலிருந்து இன்னொரு ஐபிஎல் அணிக்கு ஒரு வீரர் விற்கப்படும் ஒப்பந்தத்தில் என்ன தொகைக்கு வீரர் விற்கப்படுகிறாரோ, அந்த ஒட்டு மொத்த டீல் முழுதும் பணப்பரிமாற்றத்தின் மூலமே நடைபெறும். அல்லது வீரர்கள் பரிமாற்றம் எனில் அந்தந்த வீரரின் ஏலத்தொகை இடைவெளியை நிரப்பும் தொகைப் பரிமாற்றத்தின் மூலம் நிகழும். இதுவும் ரொக்க டீல்தான். சரி! இதற்கெல்லாம் என்ன கணக்கு, தணிக்கை உண்டா? - உஷ்! கண்டுக்காதீங்க! மாறாக சாதாரண உழைக்கும் மக்களின் சிறிய தொகைப் பரிமாற்றத்திற்குக் கூட டி.டீ.எஸ். பிடிக்கப்படுகிறது!
ஐபிஎல் விதிமுறைகளின்படி ஒரு சீசன் முடிந்தவுடன் ஒரு மாதம் கழித்து இந்த வீரர்கள் வியாபார சாளரம் திறக்கப்படும். ஏலத்திற்கு ஒருவாரம் முன்னதாக சாளரம் மூடப்படும். பிறகு அடுத்த சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதம் வரையிலும் நீடிக்கும். 2009-ல் இந்த வீரர்கள் வர்த்தகச் சாளரம் ஐபிஎல்--ல் திறக்கப்பட்டது. டெல்லி டேர் டெவில்ஸ் அணியிடமிருந்து மும்பை இந்தியன்ஸ் ஷிகர் தவானை வாங்கியதன் மூலம் இது தொடங்கியது. ஆஷிஷ் நெஹ்ரா-ஷிகர் தவான் பரிமாறிக்கொள்ளப்பட்டனர்.
ஹர்திக் பாண்டியா வர்த்தகத்தில் அறிவிக்கப்படாத தொகைக்கு விற்கப்பட்டுள்ளார். பொதுவாக ஏலத்தொகைக்கு சரிசமமான தொகைதான் டீலாக இருக்கும். சரி! வீரர்கள் சம்மதம் தேவையா என்றால் கட்டாயம் தேவை என்றே ஐபிஎல் விதிகள் கூறுகின்றன. ஹர்திக் விஷயத்தில் குஜராத் டைட்டன்ஸ் இயக்குநர் விக்ரம் சோலங்கி கூறும்போது, ‘ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் செல்ல விருப்பம்’ என்று தெரிவித்தார்.
2010-ல் ரவீந்திர ஜடேஜா ரகசியமாக இன்னொரு அணியுடன் பேரம் பேசியதாக ஒரு சீசன் அவர் தடை செய்யப்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் புதிப்பிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே ஜடேஜா மும்பையுடன் பேரத்தில் இறங்கினார், இது ஐபிஎல் வீரர்கள் ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று அவர் தடை செய்யப்பட்டார்.
சரி! வீரர் ஒரு அணியிலிருந்து இன்னொரு அணிக்குச் செல்ல விரும்புகிறார், ஆனால் அணி உரிமையாளர் அதற்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? உரிமையாளர் முடிவே இறுதியானது. ஒரு புறம் வீரர்கள் விருப்பம் கட்டாயம் மறுபுறம் வீட்டோ பவர் அணி உரிமையாளருக்கே, இது எப்படி இருக்கு?
வீரர்கள் பரிமாற்றத் தொகை என்பது வீரர்களை கொடுத்து வாங்கும் உரிமையாளர்களிடையே நடைபெறும் ஒப்பந்தமாகும். வீரர்களின் ஏலத்தொகையை விட எத்தனை அதிகம் செலவழிக்கப்படுகிறதோ அதுதான் பரிமாற்றத் தொகை. ஹர்திக் பாண்டியா விவகாரத்தில் மும்பை இண்டியன்ஸ், குஜராத் டைட்டன்ஸுக்கு அறிவிக்கப்படாத ஒரு பரிமாற்றத்தொகையைக் கொடுத்தது. இந்த பரிமாற்றத்தொகைக்கு எந்த ஒரு உச்ச வரம்பும் கிடையாது, ஆனால் என்ன தொகை என்ற விவரம் ஐபிஎல் மட்டுமே அறிந்த ஒன்று.
சரி! இந்தத் தொகையில் வீரர்களுக்குப் பங்கு உண்டா? ஒப்பந்தத்தின் படிவீரருக்கு இந்த தொகையில் 50% சேர வேண்டும். ஆனால் குறிப்பிட்ட வீரருக்கும் உரிமையாளருக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் தன்மையே இதைத் தீர்மானிக்கும். ஆனால் பரிமாற்றத் தொகையில் ஒரு பங்கு வீரருக்குக் கிடைக்கும் என்ற உத்தரவாதம் எதுவும் இல்லை. இன்னொரு முரண்பாடு! இந்த பரிமாற்றம் ஏலத்தின் போது உரிமையாளர்களின் செலவுத்தொகை உச்சவரம்பை பாதிக்காது.
ஒரு புறம் வீரர்கள் ஏலத்திற்கான உரிமையாளர்கள் செலவிடும் உச்சவரம்புத் தொகையை நிர்ணயிப்பது மறுபுறம் அந்த உச்சவரம்பையே மீறும் வீரர்கள் பரிமாற்ற சாளரத்தைத் திறந்து விடுவது. இப்படியாக முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஐபிஎல் திகழ்கிறது. இந்த முரண்பாடுகளுக்கிடையே என்ன நடக்கிறது என்பது யாருக்கும் பிடிபடாத மர்மமே.
தகவல் உறுதுணை: ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT