Published : 28 Nov 2023 07:40 AM
Last Updated : 28 Nov 2023 07:40 AM

மும்பை அணிக்கு திரும்பினார் ஹர்திக் பாண்டியா: கேமரூன் கிரீன் பெங்களூரு அணிக்கு இடம் பெயர்ந்தார்

ஹர்திக் பாண்டியா

மும்பை: 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இதற்கிடையே ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைக்கவும், விடுவிக்கவும் நவம்பர் 26-ம்தேதி மாலை 5 மணி வரை அவகாசம்அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் விடுவித்த வீரர்கள்,தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.

இதில், குஜராத் அணியானது கேப்டன் ஹர்திக் பாண்டியாவை தக்க வைத்திருப்பதாக அறிவித்தது. ஆனால் இந்த பட்டியல் வெளியிடப்பட்ட அடுத்த 2 மணி நேரத்தில் ஹர்திக் பாண்டியாவை, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. எனினும் இதுதொடர்பான அதி காரப்பூர்வ அறிவிப்பு தாமதமாகவேவெளியானது. ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அழைத்துக்கொள்ள முடிவு செய்துள்ள மும்பை அணி ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை ரூ.17.5 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விற்பனை செய்துள்ளது.

அனைத்து அணிகளும் தேவையான வீரர்களை பரிமாற்றம் செய்துகொள்ள வரும் டிசம்பர் 12-ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அணிகள் வீரர்களை வாங்கவும்,விற்கவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையிலேயே ஹர்திக் பாண்டியாவை வாங்கி உள்ளது மும்பை அணி. கடந்த 2022-ம் ஆண்டு அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, கோப்பையை வென்று கொடுத்திருந்தார். தொடர்ந்து நடப்பு ஆண்டு தொடரில் அவரது தலைமையிலான குஜராத் அணி 2-வது இடம் பெற்றிருந்தது.

ஹர்திக் பாண்டியா கடந்த 2015-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது கிரிக்கெட் பயணத்தை மும்பை அணியுடன் தான் தொடங்கியிருந்தார். அப்போது அவரை அறிமுக வீரராக மும்பை அணி ரூ.10 லட்சத்துக்கு ஏலம் எடுத்திருந்தது. 2015, 2017, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா அங்கம் வகித்திருந்தார். தொடர்ந்து 2022-ம் ஆண்டு வீரர்களின் மெகா ஏலத்தை முன்னிட்டு ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி விடுவித்திருந்தது.

2 சீசன்களுக்கு பிறகு தற்போது ஹர்திக் பாண்டியாவை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது மும்பை அணி. ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா கடந்த இரு சீசன்களிலும் குஜராத் அணிக்காக 30 ஆட்டங்களில் விளையாடி 133.49 ஸ்டிரைக் ரேட்டுடன் 833 ரன்கள் சேர்த்திருந்தார். 11 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார். 24 வயதான கேமரூன் கிரீன், கடந்த சீசனில் ஒரு சதம், 2 அரை சதங்கள் அடித்திருந்தார். பந்து வீச்சில் 6 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார். தற்போது அவர், விராட் கோலி, டு பிளெஸ்ஸிஸ் ஆகியோர் அங்கம் வகிக்கும் பெங்களூரு அணியுடன் இணைந்துள்ளார்.

குஜராத் கேப்டன் ஷுப்மன் கில்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி பரிமாற்ற முறையில் வாங்கியது. இதைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டு சீசனுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக தொடக்க வீரரான ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் குஜராத் அணிக்காக மட்டை வீச்சில் ஷுப்மன் கில் 890 ரன்கள் குவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x