Published : 26 Nov 2023 04:52 PM
Last Updated : 26 Nov 2023 04:52 PM
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் ஹாக்கி விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட கோவில்பட்டியை சேர்ந்த வீரர்கள் பால் பாய்ஸ்களாக இயங்கி வருகின்றனர். இதன் மூலம் தங்களது ஹாக்கி விளையாட்டு திறனை மேம்படுத்துவது அவர்களது நோக்கமாகும்.
வளர்ந்து வரும் இந்த வீரர்களின் வயது 8 முதல் 10-க்குள் இருக்கும். தமிழகத்துக்கும், தேசத்துக்கும் பல ஹாக்கி வீரர்களை உருவாக்கி தந்த மண் கோவில்பட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடருக்காக சுமார் 14 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எளிய பின்புலத்தை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களது பெற்றோர்களில் பெரும்பாலானோர் வத்திப்பெட்டி தயாரிக்கும் தொழிற்கூடங்களில் பணியாற்றி வருகின்றனர்.
“இந்த வாய்ப்பின் மூலம் இந்த சிறுவர்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ள முடியும் என பார்க்கிறேன். மாநில மற்றும் தேசிய அணிக்காக விளையாடிய வீரர்கள் பலரும் தொடக்க காலத்தில் பால் பாய்ஸ்களாக இயங்கி இருப்பார்கள். நான் அகில இந்திய ஹாக்கி தொடரில் பால் பாயாக இயங்கினேன். பின்னர் ஒரு வீரராக உருவானேன்.
கோவில்பட்டி மண் தமிழகத்தில் ஹாக்கி விளையாட்டுக்கு பிரசித்தி பெற்றது. இங்கு உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த விளையாட்டு குறித்த விதிகளை அறிவார்கள். கிளப் அளவில் இயங்கி வரும் வீரர்களுக்கு சீனியர் வீரர்கள் மற்றும் கிளப் சார்பில் விளையாட்டு உதவிகள் வழங்கப்படும்” என்கிறார் ஹாக்கி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன்.
ஹாக்கி விளையாட்டு குறித்த தெளிவான புரிதலை இதன் மூலம் இந்த சிறுவர்கள் அறிவார்கள் என்கிறார் தூத்துக்குடி ஹாக்கி பிரிவு செயலாளர் குரு சித்ரா சண்முக பாரதி. “இங்கு நாங்கள் பார்ப்பதும், நாங்கள் களத்தில் விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நான் டிஃபென்டர். இங்கு விளையாடும் டிஃபென்டர்களை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகள் தற்காப்பு முறையில் சிறந்து விளங்குகின்றன. அவர்களின் ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்கிறார் பாண்டவர்மங்கலம் ஹாக்கி கிளப்பிற்காக விளையாடும் ஆறாம் வகுப்பு மாணவர் கபிலேஷ் சோனு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT