Published : 25 Nov 2023 06:30 AM
Last Updated : 25 Nov 2023 06:30 AM

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: அரை இறுதிக்கு செர்பியா, இத்தாலி முன்னேற்றம்

மலாகா: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் செர்பியா, இத்தாலி அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.

ஸ்பெயினின் மலாகா நகரில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நெதர்லாந்துக்கு எதிரான கால் இறுதி சுற்றில் இத்தாலி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தின் போடிக் வான் டி ஸாண்ட்ஸ்கால்ப் 6-7 (6-8), 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் போராடி இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியை வீழ்த்தினார். இதனால் நெதர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

எனினும் அடுத்த ஆட்டத்தில் இத்தாலி பதிலடி கொடுத்தது. அந்த அணியின் வீரர் ஜன்னிக் ஷின்னர் 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரை வீழ்த்தினார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது. வெற்றியாளர்யார்என்பதை தீர்மானித்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இத்தாலியின் ஜன்னிக் ஷின்னர், லோரென்சோ சோனேகோ ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர், வெஸ்லி கூல்ஹோஃப் ஜோடியை தோற்கடித்தது.

இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இத்தாலி வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் கால்பதித்தது. அரை இறுதியில் இத்தாலி அணியானது, செர்பியாவை எதிர்கொள்கிறது. செர்பியா தனது கால் இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் பிரிட்டனை தோற்கடித்தது. முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிக் 7-6 (7-2), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஜேக் டிராப்பரை வீழ்த்தினார். அடுத்த ஆட்டத்தில் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் எளிதாக கேமரூன் நோரியை தோற்கடித்தார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் கால் இறுதி சுற்றில் பிரிட்டனின் கேமரூன் நோரிக்கு எதிராக பந்தை திருப்புகிறார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x