Published : 24 Nov 2023 06:20 PM
Last Updated : 24 Nov 2023 06:20 PM

அகதிகள் முகாமில் இருந்து கால்பந்து உலகில் ஒரு நாயகன் - 17 வயது நெஸ்டோரி இரன்குன்டா!

நெஸ்டோரி இரன்குன்டா

கிரிக்கெட்டில் 16 வயதில் நுழைந்து சச்சின் டெண்டுல்கர் எப்படி ‘சைல்டு புராடிஜி’ என்ற பெயருடன் தொடங்கி 100 சதங்களை விளாசிய உலகின் தலை சிறந்த வீரர் ஆனாரோ, அதே போல் தான்சானியா அகதிகள் முகாமில் பிறந்து எப்படியோ ஆஸ்திரேலியா வந்து அங்கு கால்பந்து ‘சைல்டு புராடிஜி’ ஆக பெயர் எடுத்து அடுத்த ஆண்டு ஜெர்மனியின் மதிப்பு மிக்க கால்பந்து கிளப் ஆன பேயர்ன் மூனிச்சிற்கு ஆடவிருக்கிறார் நெஸ்டோரி இரன்குன்டா (Nestory Irankunda).

2006-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி தான்சானியாவின் கிகோமாவில் பிறந்தவர் நெஸ்டோரி இரன்குன்டா. கிடியன் மற்றும் டாஃப்ரோசா தம்பதியினரின் 8 குழந்தைகளில் இரன்குன்டா 3-வது குழந்தையாவார். உண்மையில் பருண்டியைச் சேர்ந்த இந்தக் குடும்பம் அங்கு சிவில் யுத்தம் ஏற்பட்டதன் காரணமாக தான்சானியாவிற்கு அகதிகளாகப் புலம் பெயர்ந்தனர். அகதிகள் முகாமில் பிறந்தவர்தான் நெஸ்டோரி இரன்குன்டா. ஆனால், பிறந்த 3 மாதங்களிலேயே இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குக் குடிபெயர்ந்தனர். தன் வீட்டில் தன் சகோதரர்களுடன் வீட்டு புறக்கடையில் கால்பந்து விளையாடி தன் ஆர்வப் பயணத்தைத் தொடங்கினார்.

தன் 8-வது வயதிலேயே பாராஃபீல்ட் கார்டன்ஸ் கிளப் அணிக்காக சீரியஸான கால்பந்துக்கு அறிமுகமானார். ஆஸ்திரேலியக் கால்பந்து வட்டாரத்தில் தன் ஆரம்பக்காலங்களில் நாதர்ன் உல்வ்ஸ் மற்றும் பாராபீல்ட் கார்டன்ஸ் அணிக்காக ஆடினார். இவரது திறமைகளைப் பார்த்து வியந்த பயிற்சியாளர் ஒருவர் இவரை நேஷனல் பிரிமியர் லீக் அணியான அடிலெய்ட் குரேஷியா ரைடர்ஸ் அணிக்குத் தேர்வு செய்தார்.

அப்போது ஏ-லீக் தலைமை இரன்குன்டாவின் திறமையில் வியந்து போய் அடிலெய்ட் யுனைடெட் அணியினருடன் பயிற்சி செய்ய அழைத்து பிறகு அந்த அணியில் நிரந்தர இடமும் அளித்தார். அந்த இளையோர் லீக் தலைவர் ஆண்ட்ரியோலி ஒரு நேர்காணலில் இரன்குன்டாவைப் பற்றி விதந்தோதிக் கூறுகையில், “நெஸ்டோரி போன்ற சிறுவர்களைப் பார்க்கும் போது அந்தத் திறமை நம்மை வியக்க வைக்கிறது. ஆட்டத்தைப் புரிந்து கொள்ளும் திறமை அவர் ஸ்ட்ரீட் ஸ்மார்ட் வீரர். இவரது திறமை போன்று ஆஸ்திரேலிய வீரர்களிடம் கூட நான் பார்த்ததில்லை.

15 வயதில் அடிலெய்ட் யுனைடெட் அணியின் நேஷனல் லீக் அணியில் இடம்பெறத் தொடங்கினார். 15 வயதிலேயே 26 ஆட்டங்களில் 12 கோல்களை அடித்தார் இரன்குன்டா. ஏ-லீக் வரலாற்றில் ஆறாவது இளைய வீரராகவும், அடிலெய்டு யுனைடெட் அணிக்காக மூன்றாவது இளைய வீரராகவும் இரங்குண்டா ஆனார். அப்போதுதான் நியூகேசில் ஜெட்ஸ் அணிக்கு எதிராக ஸ்டாப்பேஜ் நேரத்தில் இரன்குன்டா அடித்த ஃப்ரீ கிக் கோல் அனைவரையும் அதிசயிக்க வைத்தது.

போட்டியை அடிலெய்ட் யுனைடெட் 2-1 என்று வென்றது. இந்தத் தொடரில் வரிசையாக அதிசயிக்க வைக்கும் கோல்களை அடித்து இளம் வயதிலேயே ஏ-லீக் ஆல் ஸ்டார்ஸ் அணியில் இணைந்தார். நவம்பர் 2022இல் அணி கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தாமதமாக வந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பிறகு மீண்டும் வந்த போது பிரிஸ்பன் ரோர் அணிக்கு எதிராக அற்புதமான ஒரு கோலை அடிக்க அடிலெய்ட் யுனைடெட் 2-1 என்று போட்டியை வென்றது. இந்த கோல் ஊடகங்களின் கவனத்தையும் கவர்ந்தது.

ஆனால் இத்தனை திறமை இருக்கும் இடத்தில்தான் ஆக்ரோஷமும் இருக்கும், ஒரு முறை எதிரணி வீரருடன் சண்டையிட்டு ஆட்டத்திலிருந்து பாதியிலேயே அனுப்பப்பட்டார். ஆனாலும், இவரது திறமையினால் இவரை விட யாருக்கும் மனது வரவில்லை. அந்த சீசனில் ஏ-லீகில் 8 கோல்களை அடித்து முந்தைய சாதனையையும் முறியடித்தார் இரன்குன்டா.

இவரது சர்ச்சைகளுக்கிடையிலும் பல கிளப்கள் அதாவது இங்கிலிஷ் பிரிமியர் லீக் கிளப்புகள் உட்பட ஜெர்மனி கிளப்புகள் இரன்குன்டாவை ஒப்பந்தம் செய்ய போட்டா போட்டியில் இறங்கின. ஆனால், நவமர் 14, 2023-ல் இவரது அணியான அடிலெய்ட் யுனைடெட் அணி இவரை ஜெர்மனியின் மதிப்பு மிக்க கிளப் ஆன பேயர்ன் மூனிச்சிற்கு ஒப்பந்தம் செய்ததாக அறிவித்தது, ஒப்பந்தத் தொகை பெரிய தொகையாம். 2024ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி இரன்குன்டா பேயர்ன்முனிச் அணியுடன் இணையவிருக்கிறார்.

சர்வதேச ஆஸ்திரேலிய அணியில் அழைப்பு: தான்சானியா, பருண்டி, ஆஸ்திரேலியா தேச அணிகளை இரன்குன்டா பிரதிநிதித்துவம் செய்ய முடியும் என்ற வேளையில் 2023 ஏ.எஃப்.சி. யு-17 அணிக்காக ஆஸ்திரேலிய அணியில் தேர்வு ஆனார். அந்தப் போட்டித் தொடரில் நாதர்ன் மெரினா தீவுகளுக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்தார். பிறகு இதே தொடரில் கம்போடியாவுக்கு எதிராக 1 கோலையும் சீனாவுக்கு எதிராக 2 கோல்களையும் அடித்தார். இரன்குன்டாவின் ஆட்டம் ஆஸ்திரேலிய அணியை ஏ.எஃப்.சி. யு-17 தொடருக்கு தகுதி பெறச் செய்தது. தாய்லாந்தில் நடந்த ஏ.எஃப்.சில் கால்பந்து தொடரிலும் ஆஸ்திரேலியா யு-17 அணியில் ஆடினார்.

சீனாவுக்கு எதிராக 18 நிமிடங்களில் 2 கோல்களை அடிக்க ஆஸ்திரேல்யா 5-3 என்று வென்றது. இதில் 2-வது கோல் அரை மைதானத்திலிருந்து அடித்த இடி போன்ற ஷாட்டில் விளைந்த கோலாகும் இது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் நாக் அவுட்டில் ஆஸ்திரேலியா ஜப்பானிடம் 1-3 என்று தோற்றது. இவரது திறமையினால் ஈர்க்கப்பட்ட ஆஸ்திரேலிய தேசிய சீனியர் அணி இரன்குன்டாவை சர்வதேச பிரெண்ட்லீ போட்டிக்கு அழைத்தது. ஈக்வடாருடனான போட்டியாகும் அது.

இரன்குன்டாவின் கால்பந்தாட்ட பாணி: இவர் ஆஸ்திரேலியா கால்பந்து பயிற்சியில் வளர்த்தெடுக்கப்பட்ட ஆகச்சிறந்த வீரர் என்று கருதப்படுகிறார். இவரது ஃப்ரீ கிக் கோல்கள், போர்ச்சுகல் மேதை கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் ஒப்பீடு செய்யப்படும் அளவுக்கு பிரமாதமானது என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

ரைட் விங் பகுதியில் அடிலெய்ட் யுனைடெட் அணிக்கு ஆடும்போது இவரது வேகம் மற்றும் எதிரணி வீரர்களின் கால்களைக் கடந்து பந்துகளை மின்னல் வேகத்தில் எடுத்துச் செல்வது பரவலாக விதந்தோதப்படுகிறது. இவரது அட்டாக்கின் கால்பந்தாட்டத்தினால் எதிரணி வீரர்கள் இவரை மடக்குவதற்காக அதிகம் ஃபவுல் செய்வதும் இவரது திறமைகளுக்கான எடுத்துக்காட்டாகப் பேசப்படுகிறது.

இப்போது மதிப்பு மிக்க பேயர்ன் மூனிச் கிளப்புக்காக 4 ஆண்டுகால ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நெஸ்டோரி இரன்குன்டா. இந்த வயதில் இரன்குன்டா ஏற்படுத்திய ஈர்ப்பு மற்றும் பிராபல்யம் அளப்பரியது என்கிறது பேயர்ன்மூனிச் கிளப். விரைவில் ஆஸ்திரேலிய சீனியர் அணியில் ஒரு சென்சேஷன் உலகக்கோப்பையிலோ அல்லது வேறு தொடர்களிலோ அறிமுகமாகும் போது நெஸ்டோரி இரன்குன்டா ஒரு பெரிய வீரராகவே எதிர்பார்க்கப்படுவார்.

கால்பந்து உலகில் எத்தனையோ பிரேசில் சைல்டு புராடிஜிகள் உருவாகி வந்து கொண்டிருக்கின்றன, அதே போல் ஐரோப்பிய கால்பந்திலும் எத்தனையோ இளம் வீரர்கள் வருகின்றனர், போகின்றனர், ஆனால் நெஸ்டோரி இரன்குன்டா அளவிற்கு இவ்வளவு விதந்தோதப்பட்டு 17 வயதிலேயே பிரபலமாகி வரும் ஒரு நட்சத்திரத்தை இதுவரை கண்டதில்லை என்றே கால்பந்து அரங்கில் கூறப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x