Published : 24 Nov 2023 06:21 AM
Last Updated : 24 Nov 2023 06:21 AM

தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் | ஜார்கண்ட், மணிப்பூர் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

ஆடவருக்கான 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘இ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜம்மு

சென்னை: ஆடவருக்கான 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 7-வது நாளான நேற்று ‘இ’பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்கால் - மணிப்பூர் அணிகள்மோதின. இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. பெங்கால் அணி சார்பில் நியூபேன் நிதிஷ் 2 கோல்களும், ராஜேந்திரா ஒரு கோலும் அடித்தனர்.

மணிப்பூர் சார்பில் நீலகண்ட சர்மா 2 கோல்களும் நிங்கோம்பம் ஜென்ஜென் சிங் ஒரு கோலும் அடித்தனர். இரு அணிகளும் தலா 2வெற்றி, ஒரு டிராவை பதிவுசெய்து 7 புள்ளிகளை பெற்ற போதிலும் கோல்கள் வித்தியாசத்தின்அடிப்படையில் தனது பிரிவில் முதலிடம் பிடித்து மணிப்பூர் அணிகால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஜம்மு & காஷ்மீர் - இமாச்சலபிரதேச அணிகள் மோதின. இதில் இமாச்சலபிரதேச அணி 13-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் முகமது நிசாமுதின் 3 கோல்களும் அக் ஷய் துபே, அர்ஜூன் சர்மா, சவுரப் பாஷைன் ஆகியோர் தலா 2 கோல்களும் கிளாட்வின் ஷான் கிளென், சத்யம் சுவாமி, ஹிமான்ஷு சைனிக், ஸ்வப்னில் கவாட்கர் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். கால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட இமாச்சல பிரதேச அணி ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது.

எஃப் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் 3-0 என்ற கோல் கணக்கில் கோவாவை தோற்கடித்தது. அந்த அணி சார்பில் நோயல் 2 கோல்களும், டெனிஸ் கீகெட்டா ஒரு கோலும் அடித்தனர். ஜார்க்கண்ட் அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன்மூலம் அந்த அணி 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தது.

எஃப் பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சண்டிகர் 6-2 என்ற கோல் கணக்கில் ஆந்திராவை வீழ்த்தியது. சண்டிகர் அணி சார்பில் மணீந்தர் சிங் 4 கோல்களும், விஷால்ஜித் இரு கோல்களும் அடித்தனர். அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 6 புள்ளிகளை பெற்ற சண்டிகர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x