Published : 22 Nov 2023 06:58 AM
Last Updated : 22 Nov 2023 06:58 AM
சென்னை: 13-வது ஆடவருக்கான தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
28 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடரில் 5-வது நாளான நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ‘டி’ பிரிவில் உள்ள பஞ்சாப் - மகாராஷ்டிரா அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ஜுக்ராஜ் சிங் 26-வது நிமிடத்திலும், சிம்ரன்ஜித் சிங் 41-வது நிமிடத்திலும், தில்பிரீத் சிங் 51-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 54-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.
மகாராஷ்டிரா அணி சார்பில் வால்மிகி யுவராஜ் 20 மற்றும் 59-வது நிமிடங்களில் கோல் அடித்தார். பஞ்சாப் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 24-ம் தேதி உத்தராகண்டுடன் மோதுகிறது. ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹரியாணா 13-1 என்ற கோல் கணக்கில் சத்தீஸ்கரை தோற்கடித்தது. ஹரியாணா அணி சார்பில் சஞ்சய் 4 கோல்களும், கோஹினூர்பிரீத் சிங் 3 கோல்களும் ரஜந்த் மற்றும் தீபக் தலா 2 கோல்களும் அபிஷேக், முகுல் சர்மா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
‘ஜி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா - ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் உத்தரபிரதேசம் 3-2 என்ற கோல் கணக்கில் புதுச்சேரியை வீழ்த்தியது. உத்தரபிரதேசம் அணி சார்பில் மணீஷ் யாதவ், சுனில் யாதவ், பராஸ் முகமது ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். புதுச்சேரி அணி தரப்பில் அருண் குமார் 2 கோல்கள் அடித்தார்.
‘ஹெச்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா 8-1 என்றகோல் கணக்கில் டெல்லி அணியைவென்றது. ஒடிசா அணி சார்பில் அமித் ரோஹிதாஸ் 3 கோல்களும், ஆஷிஸ் குமார் 2 கோல்களும் ரஜின் கந்துலானா, நீலம் சஞ்ஜீப், லக்ரா ஷிலானந்த் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT