Published : 20 Nov 2023 09:02 AM
Last Updated : 20 Nov 2023 09:02 AM

மைதான ‘அமைதி’ முதல் பிரதமர் மோடி வருகை வரை: இந்தியா vs ஆஸி. இறுதிக் களத்தின் டாப் 10 ‘சம்பவங்கள்’!

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. பலம் வாய்ந்த இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது ஆஸி. இந்தப் போட்டியின் டாப் 10 தருணங்கள்.

“மிகவும் மகிழ்ச்சி” - ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்: இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடினோம். அதை கடைசி ஆட்டத்திலும் செயல்படுத்தி வெற்றி கண்டோம். இந்த மைதானத்தில் இரவு நேரத்தில் சேசிங் செய்வது சிறந்தது என்று நினைத்தோம். எங்கள் வீரர்கள் களத்தில் சிறப்பாக செயல்பட்டனர். அனுபவமும், இளமையும் கலந்த அணியாக இருந்தது.

இந்தியா 300 ரன்கள் எடுத்தால் கூட அதை எங்களால் துரத்தி வெற்றி காண முடியும் என்று நினைத்தோம். லபுஷேனும், டிராவிஸ் ஹெட்டும் அமைதியாக விளையாடி அருமையான வெற்றியைக் கொடுத்துள்ளனர். டிராவிஸ் ஹெட்டை, தேர்வுக் குழுவினர் தேர்வு செய்ததற்கு நியாயம் சேர்த்துள்ளார். நான் பந்துவீசும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். இன்றிரவு என்ன நடந்தாலும் அது ஒரு சிறப்பான தருணம். இந்த ஆண்டு நீண்ட காலமாக நினைவில் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கபில்தேவும்… டிராவிஸ் ஹெட்டும்.. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அடித்த பந்தை, வெகுதூரம் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து பிடித்து அவுட்டாக்கினார் டிராவிஸ் ஹெட். 1983-ல் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், மேற்கு இந்தியத் தீவு வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை வெகு தூரம் பின்னோக்கி ஓடிச் சென்று பிடித்து அவுட்டாக்கினார். இது கபில்தேவின் பிடித்த கேட்ச்சை கண் முன் கொண்டுவந்தது.

ஆடுகளத்துக்குள் புகுந்த நபர்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 14 ஓவரில் திடீரென பார்வையாளர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்தார். பாலஸ்தீன கொடி இடம்பெற்ற முகக் கவசமும், பாலஸ்தீன விடுதலை , பாலஸ்தீனம் மீது குண்டுவீசுவதை நிறுத்துங்கள் ஆகிய வாசகங்கள் இடம்பெற்ற டி சர்ட்டுடனும் கையில் கொடியுடனும் அவர் காட்சியளித்தார். மைதானத்துக்குள் நுழைந்த அவர், விராட் கோலி அருகே சென்று அவர் தோள் மீது கை போட்டபடி நின்றார். இதையடுத்து மைதான அதிகாரிகள் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கேப்டனாக அதிக ரன்: உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன்கள் வரிசையில் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்தார். அவர் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 581 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

ஒரே இலக்கு: இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியிலும் இதே ரன்கள்தான் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 11-வது ஓவருக்குப் பிறகு இந்திய வீரர்கள் சிக்ஸர்கள் விளாசவே இல்லை. இந்தத் தொடரில் 11-வது ஓவர் முதல் 40-வது ஓவர் வரை இந்திய வீரர்கள் சிக்ஸர் விளாசாமல் இருந்தது இந்தப் போட்டியில்தான்.

இந்திய அணி பேட்டிங் செய்தபோது 16-வது ஓவரிலிருந்து 26-வது ஓவர் வரை 8 பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி பந்துவீசச் செய்தார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ். ஆடம் ஸம்பா, கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், ஹேசில்வுட், டிராவிஸ்ட ஹெட், ஸ்டார்க், மேக்ஸ்வெல், ஸம்பா ஆகியோர் மாறி மாறி பந்துவீசினர்.

ரன் குவிப்பில் கோலி 2-வது இடம்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 3 ரன்கள் எடுத்திருந்தபோது உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை (1,743 ரன்கள்) பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைப் பிடித்தார். 54 ரன்களில் ஆட்டமிழந்த விராட் கோலி உலகக் கோப்பை தொடர்களில் ஒட்டுமொத்தமாக 1,795 ரன்களை குவித்துள்ளார். இந்த வகை சாதனையில் சச்சின் டெண்டுல்கர் (47 போட்டிகளில் 2,278 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.

பவுண்டரி கொடுக்காத கம்மின்ஸ்.. உலகக் கோப்பைத் தொடரில் இந்த ஆட்டத்தில் 10 ஓவர்கள் பந்துவீசி ஒரு பவுண்டரி கூட விட்டுக் கொடுக்காமல் இருந்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் கேப்டன் பாட் கம்மின்ஸ் செய்துள்ளார். இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு பந்துவீச்சாளர், 10 ஓவர்கள் பந்துவீசி ஒரு பவுண்டரி கூட விட்டுக்கொடுக்காமல் இருந்த நிகழ்வு 8 முறை நடைபெற்றுள்ளது. இதில் பாட் கம்மின்ஸ் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர். மற்ற அனைவரும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சொன்னதை செய்த கம்மின்ஸ்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், “மைதானத்துக்கு வரும் 1.30 லட்சம் பார்வையாளர்களும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று உற்சாகப்படுத்துவார்கள். அவர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு” எனத் தெரிவித்தார்.

அவர், கூறிய இந்த சொல்லை நேற்றைய இறுதிப் போட்டியின் போது செய்து காண்பித்தார். ரோஹித் சர்மா களத்தில் இருந்தவரை ஆரவாரம் செய்த ரசிகர்கள் அவர், ஆட்டமிழந்த பின்னர் அமைதியானர்கள். ஏனெனில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த பின்னர் அடுத்த ஓவரிலேயே ஸ்ரேயஸ் ஐயர் நடையை கட்டினார். இதைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்த 97 பந்துகளில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. மாறாக சீரான இடைவெளியில் விக்கெட்களையும் பறிகொடுத்தது.

வெற்றி எங்கள் பக்கம் இல்லை… இறுதிப் போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: இன்று வெற்றி எங்கள் பக்கம் இல்லை.. நாங்கள் போதிய அளவுக்கு செயல்படவில்லை. ஆனால் அனைத்தையும் முயற்சித்தோம். இன்னும் 20 அல்லது 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். விராட் கோலியும், கே.எல்.ராகுலும் ஜோடி சேர்ந்து இன்னிங்ஸை கட்டமைக்க முயற்சித்தனர். இதனால் 270 முதல் 280 ரன்கள் எடுப்போம் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்களை இழந்தோம். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், லபுஷேன் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தோம். தோல்விக்கு காரணம் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

போட்டியை நேரில் பார்த்த பிரதமர் மோடி: இறுதிப் போட்டியை காண பிரதமர் மோடி, அகமதாபாத் வந்திருந்தார். மைதானத்தில் அமைச்சர் அமித் ஷாவுடன் அமர்ந்து போட்டியை பார்த்தார். தொடர்ந்து வெற்றிக் கோப்பையை ஆஸ்திரேலிய துணை பிரதமருடன் இணைந்து கம்மின்ஸ் வசம் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x