Published : 19 Nov 2023 08:28 PM
Last Updated : 19 Nov 2023 08:28 PM
அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷேன் இணைந்து 100+ ரன் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். 47 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து அந்த அணி தடுமாறிய நிலையில் இருவரும் இந்த கூட்டணி அமைத்தனர்.
241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. வார்னர், மார்ஷ் மற்றும் ஸ்மித் ஆகியரோ விரைந்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் பதற்றம் அடையாமல் ஆடிய ஹெட் மற்றும் லபுஷேனும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இந்திய அணி சார்பில் குல்தீப், ஜடேஜா, சிராஜ், ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் பந்து வீசியும் அவர்களது விக்கெட்டை அணிக்கு தேவையான நேரத்தில் கைப்பற்ற முடியவில்லை. 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா. ஹெட் 86 ரன்களுடனும், லபுஷேன் 37 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
இந்தியா இன்னிங்ஸ்: கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். கில், 4 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார் ரோகித் சர்மா. 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஹெட் அபார கேட்ச் பிடித்து ரோகித்தை வெளியேற்றினார். ஸ்ரேயஸ் ஐயர், 4 ரன்களில் அவுட் ஆனார்.
3 விக்கெட்கள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து இந்தியா தடுமாறியது. அப்போது கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் 109 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தனர். கோலி, 63 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் விக்கெட்டை இழந்த விதம் துரதிருஷ்டவசமானது. பின்னர் வந்த ஜடேஜா, 14 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த கே.எல்.ராகுல், ஸ்டார்க் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். 107 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார் அவர். இதில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அவர் பதிவு செய்திருந்தார். தொடர்ந்து ஷமி மற்றும் பும்ரா ஆகியோரும் ஆட்டமிழந்தனர். 45 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ஆஸ்திரேலிய அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருந்தது. எப்படியும் சுமார் 20 ரன்களை அவர்கள் தடுத்திருப்பார்கள்.
சூர்யகுமார் யாதவ், 28 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருக்கு பந்தை மிகவும் நிதானமாக வீசி இருந்தனர் ஆஸ்திரேலிய பவுலர்கள். 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது இந்திய அணி. முதல் முறையாக இந்த தொடரில் ஆல் அவுட் ஆகியுள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் வெற்றி பெற ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் எடுக்க வேண்டும். ஸ்டாரக் 3 விக்கெட்கள், கம்மின்ஸ் மற்றும் ஹேஸசில்வுட் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். மேக்ஸ்வெல் மற்றும் ஸாம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆகி வெளியேறி இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT