Published : 19 Nov 2023 04:26 PM
Last Updated : 19 Nov 2023 04:26 PM
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 54 ரன்கள் எடுத்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார். அதனால் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானமே மொத்தமாக அமைதியானது. கம்மின்ஸ் அவரது விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய சொல்லி பணித்தது. கில், 4 ரன்களில் வெளியேறினார். ரோகித் ஷர்மா, 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ் ஐயர், 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 81 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறியது.
இக்கட்டான அந்த தருணத்தில் இருந்து அணியை மீட்கும் கூட்டணியை அமைத்தனர் கோலி மற்றும் கே.எல்.ராகுல். இருவரும் 109 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தனர். அதே நேரத்தில் அரை சதம் கடந்த நிலையில் சிறப்பாக ஆடி வந்தார் கோலி.
இந்தச் சூழலில் 29-வது ஓவரை ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை டிஃபன்ஸ் ஆட முயன்று இன்சைட் எட்ஜ் முறையில் போல்ட் ஆனார். அப்போது தான் விக்கெட் இழந்த முறையை பார்த்து கோலி அப்படியே சில நொடிகள் திகைத்து நின்றார். 63 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார் அவர். இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 761 ரன்களை அவர் எடுத்துள்ளார். 46 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக தங்கள் ஆட்டத்தின் மூலம் மைதானத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவாக உள்ள 1.30 லட்சம் பார்வையாளர்களை அமைதி கொள்ள செய்வோம் என கம்மின்ஸ் சொல்லி இருந்தார். கோலியின் விக்கெட்டை வீழ்த்தி அதனை அவர் செய்தும் காட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT