Published : 18 Nov 2023 06:06 PM
Last Updated : 18 Nov 2023 06:06 PM

இந்தியா Vs ஆஸி... யாரிடம் ‘பலம்’ அதிகம்? - உலகக் கோப்பை இறுதிப் போட்டி முன்னோட்ட அலசல்

2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைக்குப் பிறகு 20 ஆண்டுகள் சென்று, நாளை (நவ.19) அகமதாபாத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதுகின்றன. அதாவது, 2003 உலகக் கோப்பையில் கங்குலி தலைமையில் ஆடிய இந்திய அணி, இரண்டு போட்டிகளில்தான் தோல்வியுற்றது. இரண்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகள். அதில் இறுதிப் போட்டியும் அடங்கும்.

இப்போது, அதேபோல் ஆஸ்திரேலியா அணி முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அடைந்த தோல்விக்குப் பிறகு, தென் ஆப்பிரிக்காவிடமும் தோல்வி அடைந்து, பிறகு தொடர் வெற்றிகளைப் பெற்று இறுதிப் போட்டியில் இந்திய அணியை மீண்டும் சந்திக்கின்றது. ஆகவே, 2003 உலகக் கோப்பை இறுதியில் அடைந்த தோல்விக்கு, நாளை அகமதாபாத் இறுதிப் போட்டியில் இந்தியா பழிவாங்கும் என்ற பேச்சுக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே 2019 உலகக் கோப்பை அரையிறுதியில், நியூஸிலாந்திடம் தோற்றதற்கு அரையிறுதியில் மும்பையில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெளியேற்றி பழிதீர்த்துக் கொண்டது. எனவே, அடுத்து ஆஸ்திரேலியா தான் இலக்கு என்று ரசிகர்கள் மத்தியிலும் ஊடகங்கள் பலவற்றிலும் கருத்துக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால், அது அவர்களது 6-வது உலகக் கோப்பை சாம்பியன் பட்டமாகும். இந்தியா வென்றால் 3-வது உலகக் கோப்பை வெற்றி. அதாவது ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து இந்தியாதான் அதிக உலகக் கோப்பைகளை வென்ற நாடாக மிளிரும். ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் 13 முறை இதுவரை ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 8 முறையும், இந்தியா 5 முறையும் வென்றுள்ளன. மொத்தமாக இரு அணிகளும் இதுவரை மோதிய 150 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா 83 போட்டிகளிலும் இந்தியா 57 போட்டிகளிலும் வென்றுள்ளன.

ஆஸ்திரேலிய அணியின் பலமும் பலவீனமும்: ஆஸ்திரேலிய அணி இதுவரை ஆடியதை வைத்துப் பார்க்கும் போது, அந்த அணியின் பலவீனம் என்றால் அது கேப்டன் பாட் கமின்ஸின் பெரிய தொடர்களுக்கான அனுபவமின்மை என்று கூறலாம். மாறாக ரோகித் சர்மா கைதேர்ந்த ஒரு கேப்டனாக தடாலடியாக கேப்டன்சி செய்து வருகிறார். ஒரு கேப்டனாக தானே முன்னின்று அதிரடியுடன் வழிகாட்டியாக வழிநடத்தி வருகிறார்.

ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான பலவீனம், ட்ராவிஸ் ஹெட் வார்னருக்குப் பிறகு, மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பதே. ட்ராவிஸ் ஹெட், வார்னர் இணைந்து முதல் 20 ஓவர்களில் ஸ்கோரை 150-160 கொண்டு சென்றாலும், இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பலவீனத்தினால் கொத்துக் கொத்தாக விக்கெட்டுகளைக் கொடுத்து, கடைசியில் 300 ரன்களை எட்டத் திக்கித் திணறியதைத்தான் பார்த்து வருகிறோம். ஆப்கானிஸ்தானுடன் அவர்களது 297 ரன்கள் இலக்கை விரட்டிய போது, 91/7 என்று மடிந்ததை இந்திய அணியினர் நிச்சயம் கவன மேற்கொண்டிருப்பார்கள். ஆகவே ஹெட், வார்னர் தொடக்கத்தில் 10 ஓவர்களுக்குள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விட்டால், ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 300-க்கும் கீழ்தான்.

300-க்கும் கீழ் என்றால் அது இந்திய அணியின் அதிரடி லைன் அப்பிற்கு முன்னால் ஒன்றுமில்லாத இலக்குதான். ஆகவே, மிடில் ஆர்டர் பலவீனம் ஆஸ்திரேலியாவைக் கவிழ்க்கும் வாய்ப்புகளே அதிகம். ஸ்மித், லபுஷேன், மார்ஷ் போன்ற வீரர்கள் பைனல் என்பதால், தங்கள் ஆட்டத்திறனை மேம்படுத்தினால்தான் உண்டு. ஆனால் திடீரென அவர்கள் உயர்வடைவதற்கு இந்தியப் பிட்ச்கள் உதவிகரமாக இருக்காது என்பது திண்ணம்.

ஆஸ்திரேலியாவின் பலம் ஓரளவுக்கு அதன் பவுலிங், அதன் பீல்டிங். நியூஸிலாந்து அன்று ஆஸ்திரேலியாவின் 397 ரன்கள் இலக்கை விரட்டிய போது 5 ரன்களில் தோற்றனர். அப்போது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதற்குக் காரணமே பீல்டிங் தான். கடைசியில் வார்னரும், லபுஷேனும் தடுத்த பவுண்டரிகள்தான் காரணம். ஆகவே பீல்டிங், கேட்சிங் ஆஸ்திரேலியாவின் சுமாரான பந்து வீச்சைத் தூக்கி நிறுத்தும் பலமாகும்.

இந்திய அணியின் பலம்: எல்லாவற்றிற்கும் மேலாக ஆஸ்திரேலியாவுக்கு பெரிய அச்சுறுத்தல், இந்திய அணியின் பேட்டிங்தான். குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி. இவர்களில் ஒருவர் அல்லது இருவருமே பயங்கரமாக ஆடி வருகிறார்கள். ஆகவே இவர்களை தடுத்து நிறுத்தி வீழ்த்தினால்தான் ஆஸ்திரேலியா வெற்றிக்கனவையும் கூட காண முடியும். அதே போல் பவுலிங்கில் குல்தீப் யாதவ், ஷமி அவர்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல்.

இந்திய அணியில் மேற்பார்வைக்கு பலவீனமே இல்லாத அணி போல் தெரிந்தாலும், அன்று நியூஸிலாந்து அரையிறுதியில் அதிரடி ஆட்டம் காட்டி ரோகித் சர்மா வயிற்றில் புளியைக் கரைத்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதுவும் ஷமி கேட்சை விட்ட போது, அவருக்குக் காத்திருக்கிறது வசை என்று நினைத்த போது, பெரிய அளவில் மீட்டெழுச்சி கண்டார் ஷமி. 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்து இன்று விக்கெட்டுகள் எண்ணிக்கையில் டாப்பில் இருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதையும், ஆஸ்திரேலிய அணியினர் ‘நோட்’ செய்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு டைட் பவுலிங் பீல்டிங்கை ஆஸ்திரேலியா நாளைக் காட்டி, இந்திய அணியை சுருட்டினால் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்றே கூறலாம். மற்றபடி கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கே அதிகம் என்று இப்போதைக்கு கூற முடியும்.

பிட்ச் ஒரு பெரிய பேசுபொருளாகி வருகின்றது. அரையிறுதிக்கு ஸ்லோ பிட்ச் கேட்டதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டது. ஆனால் நாளை அரையிறுதிப் பிட்ச் போல் இருப்பதை இந்திய அணி நிர்வாகம் விரும்பாது. சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த உலகக்கோப்பையில் போடப்பட்ட பிட்ச் போன்றதாகவே அகமதாபாத் பிட்ச் இருக்கும் என்று நம்பலாம்.

பொதுவாக பந்துகள் பிட்ச் ஆகி ஸ்லோவாக ஸ்ட்ரோக் ப்ளே ஆட முடியாது. ஆனால் அதற்காக ஸ்பின் பந்து வீச்சுக்கு பெரிய அளவில் சாதகமில்லாமலும், பந்துகள் பெரிய உயரம் எழும்பாத ஒரு பிட்சைத்தான் இந்திய அணியினர் எதிர்பார்ப்பார்கள். டாஸ் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதான ஒரு பிட்சை நிச்சயம் அமைக்க மாட்டார்கள். ஸ்லோ அண்ட் லோ என்பார்களே அதாவது பந்துகள் மெதுவாக அதிகம் எழும்பாமல் இருக்கும், பிட்ச்கள்தான் இந்தியப் பிரியம், அதையே நாளையும் எதிர்பார்க்கலாம்.

2003 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி 2023-ல் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது. அன்று கங்குலி டாஸில் வென்று சேசிங் என்று எடுத்த முடிவு தவறாக முடிந்து ஆஸ்திரேலியா 359 ரன்களைக் குவிக்க, இந்திய அணி 39 ஓவர்களில் 234 என்று ஈடு கொடுத்துப் பார்த்தது. அன்று விராட் கோலி போல் ஒரு விரட்டல் மன்னன் இருந்திருந்தால், சேவாக் ஆடிய அதிரடி ஆட்டத்துக்கு 359 ரன்கள் இலக்கை நெருங்கிப் பார்த்திருக்கலாம் என்றே இப்போது தோன்றுகிறது. அப்போது இரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான். இப்போது ஆஸ்திரேலியா இந்த உலகக் கோப்பையில் 3-வது தோல்வியைச் சந்தித்து இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடத்தில் மேலோங்கி இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x