Published : 17 Nov 2023 06:03 PM
Last Updated : 17 Nov 2023 06:03 PM
கொழும்பு: இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா தான் என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதை மறுத்துள்ளதோடு, அந்தக் கருத்துக்கு வருத்தமும் தெரிவித்துள்ளார், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே. இந்தத் தகவலை இலங்கை அமைச்சர் ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
“அதிபர் ரணில் விக்ரமசிங்கே வியாழக்கிழமை அன்று ஜெய் ஷாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் மீதான குற்றச்சாட்டுக்கு வருத்தமும் தெரிவித்தார். ஜெய் ஷாவை நோக்கி வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எங்கள் தரப்பிலும் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு தெரிவித்தோம். இலங்கை அரசு என்ற முறையில் இதனைத் தெரிவித்தோம். இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு அவரையோ அல்லது பிற நடுகளையோ நாங்கள் குற்றம் சொல்லக் கூடாது. அது தவறான பார்வையும் கூட” என அமைச்சர்கள் ஹரின் பெர்னான்டோ மற்றும் விஜிசேகரா ஆகியோர் தெரிவித்தனர்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி மிக மோசமாக செயல்பட்டது. அதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது அந்த நாட்டு அரசு. தொடர்ந்து அர்ஜுன ரணதுங்கா தலைமையில் ஏழு பேர் அடங்கிய இடைக்கால குழு ஒன்றையும் அரசு நியமித்தது. இந்தச் சூழலில் இலங்கை அணியை கடந்த வாரம் இடைநீக்கம் செய்தது ஐசிசி. இதையடுத்து ஜெய் ஷா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT