Published : 17 Nov 2023 07:13 AM
Last Updated : 17 Nov 2023 07:13 AM

ODI WC 2023 | 2-வது அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை போராடி வென்றது ஆஸி.

டிராவிஸ் ஹெட்

கொல்கத்தா: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி போராடி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வரும் 19-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது 49.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டாஸ் வென்று பேட்டிங்கை செய்த தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. தெம்பா பவுமா ரன் ஏதும் எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க் பந்தில் நடையை கட்டினார். குயிண்டன் டி காக் 3 ரன்னில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் எய்டன் மார்க்ரம் 10 ரன்னில் ஸ்டார்க் பந்திலும், ராஸி வான் டெர் டஸ்ஸன் 6 ரன்னில் ஹேசில்வுட் பந்திலும் நடையை கட்ட தென் ஆப்பிரிக்க அணி 11.5 ஓவர்களில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்களை பறிகொடுத்து தவித்தது. 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹெய்ன்ரிச் கிளாசன், டேவிட் மில்லருடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 28 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.

நிதானமாக விளையாடிய ஹெய்ன்ரிச் கிளாசன் 48 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட் பந்தில் போல்டானார். டேவிட் மில்லருடன் இணைந்து ஹெய்ன்ரிச் கிளாசன் 95 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் களமிறங்கிய மார்கோ யான்சன் ரன் ஏதும் எடுக்காமல் டிராவிஸ் ஹெட் பந்தில் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய ஜெரால்டு கோட்ஸி நிதானமாக விளையாட டேவிட் மில்லர் மட்டையை சுழற்றினார்.

கோட்ஸி 39 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கேசவ் மகாராஜ் 4 ரன்னில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய டேட் மில்லர் 116 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசிய நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அவரது தாக்குதல் ஆட்டம் காரணமாகவே தென் ஆப்பிரிக்க அணியால் 200ரன்களை கடக்க முடிந்தது. கடைசி வீரராக காகிசோ ரபாடா 10 ரன்னில் நடையை கட்டினார்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 213 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. இந்த ஜோடி 6 ஓவர்களில் 60 ரன்கள் விளாசியது. டேவிட் வார்னர் 18 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 29 ரன் எடுத்த நிலையில் மார்க்ரம் பந்தில் போல்டானார்.

இதன் பின்னர் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரபடாவின் பந்து வீச்சில் ராஸி வான் டெர் டஸ்ஸனின் அபாரமான கேட்ச்சால் வெளியேறினார். மட்டையை சுழற்றிய டிராவிஸ் ஹெட் 48 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகாராஜ் பந்தில் போல்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 14.1 ஓவரில் 106 ரன்களாக இருந்தது.

இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. மார்னஷ் லபுஷேன் (18), கிளென் மேக்ஸ்வெல் (1) ஆகியோர் தப்ரைஸ் ஷம்சி பந்தில் வெளியேறினர். நிதானமாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 62 பந்துகளில் 30 ரன்களும், ஜோஷ் இங்லிஸ் 49 பந்துகளில் 28 ரன்களும் எடுத்த நிலையில் ஜெரால்டு கோட்ஸி பந்தில் ஆட்டமிழந்தனர். 40 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து.

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு மேற்கொண்டு 16 ரன்களே தேவையாக இருந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தது. இவற்றை சமாளித்து விளையாடிய மிட்செல் ஸ்டார்க் 38 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களும், பாட் கம்மின்ஸ் 29 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களும் சேர்க்க 47.2 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் 19-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் 5-வது முறையாக நாக் அவுட் சுற்றை கடக்க முடியாமல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது தென் ஆப்பிரிக்க அணி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x