Published : 16 Nov 2023 07:12 AM
Last Updated : 16 Nov 2023 07:12 AM

ஆஸ்திரேலியாவுடன் அரை இறுதியில் இன்று மோதல்: நாக் அவுட் சுற்று சோகங்களுக்கு முடிவு கட்டுமா தென் ஆப்பிரிக்கா?

கொல்கத்தா: உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றில் அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்த போதிலும் அதன் பின்னர் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை குவித்து 3-வது இடம் பிடித்து அரை இறுதி சுற்றில் கால்பதித்திருந்தது.

காயம் காரணமாக வங்கதேச அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் மேக்ஸ் வெல் களமிறங்கவில்லை. தற்போது அவர், முழு உடற்தகுதியை எட்டியதை தொடர்ந்து இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரரான டேவிட் வார்னர், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து சதம் அடித்த நிலையில் அதன் பின்னர் பெரிய அளவிலான ரன் வேட்டையை நிகழ்த்தவில்லை.

இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் வார்னர், டிராவிஸ் ஹெட் ஜோடி வலுவான தொடக்கம் அமைத்துக் கொடுப்பதில் தீவிரம் காட்டக்கூடும்.

கிளென் மேக்ஸ்வெல்லை போன்று மிட்செல் மார்ஷும் அதிரடியில் பலம் சேர்ப்பவராக திகழ்கிறார். 2 சதம், ஒரு அரை சதம் உட்பட 426 ரன்களை குவித்துள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன் ஆகியோரும் பார்முக்கு திரும்பினால் அணியின் பலம் அதிகரிக்கக்கூடும்.

தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நடப்பு தொடரில் மட்டை வீச்சில் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு வருகிறது. அந்த அணி லீக் சுற்றில் 7 ஆட்டங்களில் வெற்றிகளை குவித்து 2-வது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது. எனினும் ஐசிசி தொடர்களின் நாக் அவுட் சுற்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எப்போதும் இனிமையாக இருந்தது இல்லை. 4 முறை அரை இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி உள்ள போதிலும் ஒரு முறைகூட அந்த அணி இறுதி சுற்றை எட்டிப்பார்க்கவில்லை.

1992-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் ‘மழை விதியால்’ தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந்தது. ஒரு பந்தில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது. அதன் பின்னர் 1999-ம் ஆண்டு உலகக் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் லான்ஸ் குளூஸ்னர் போராட்டமும் வீண் ஆனது. ‘டை’-யில் முடிவடைந்த அந்த ஆட்டத்தில் ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா தோல்வியை சந்தித்தது.

2007-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 149 ரன்களில் சுருண்டு தென் ஆப்பிரிக்க அணி வெளி யேறியது. 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் தென் ஆப்பிரிக்கா வீழ்ந்தது. கிராண்ட் எலியாட் 73 பந்துகளில் விளாசிய 84 ரன்களின் உதவியால் நியூஸிலாந்து அணி ஒரு பந்தை மீதம் வைத்து வெற்றி கண்டது. இதனால் 4-வது முறையாக தென் ஆப்பிரிக்க அணியின் இறுதிப் போட்டி கனவு நொறுங்கியது.

இந்த சோகங்களுக்கு இம்முறை தீர்வு காண்பதில் தென் ஆப்பிரிக்க அணி கவனம் செலுத்தக்கூடும். நடப்பு தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் பிரதான 6 பேட்ஸ் மேன்களில் 4 பேர் சதம் அடித்துள்ளனர். அதிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குவிண்டன் டி காக் 4 சதங்களை விளாசி அசத்தி உள்ளார். 591 ரன்கள் வேட்டையாடி உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

2 சதங்கள், 2 அரை சதங்களுடன் 442 ரன்கள் குவித்துள்ள ராஸி வான் டெர் டஸ்ஸன், 396 ரன்கள் குவித்துள்ள எய்டன் மார்க்ரம், 326 ரன்கள் சேர்த்துள்ள ஹெய்ன்ரிச் கிளாசன் ஆகியோரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.

பந்து வீச்சில் மார்கோ யான்சன், லுங்கி நிகிடி, காகிசோ ரபாடா ஆகியோர் வலுவாக திகழ்கின்றனர். இதில் 17 விக்கெட்களை வீழ்த்தியுள்ள யான்சன், ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசைக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் கேசவ் மகாராஜ் நடு ஓவர்களில் அழுத்தம் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். போட்டி நடைபெறும் இன்றைய ஈடன் கார்டன் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடும் என்பதால் தப்ரைஸ் ஷம்சியும் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

மழை அச்சுறுத்தல்: உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று பிற்பகலில் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதற் கிடையே இந்த ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x