Published : 15 Nov 2023 05:22 PM
Last Updated : 15 Nov 2023 05:22 PM
மதமாற்றம் தொடர்பாக தன் மீது முன்வைத்த கருத்துக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கை வெகுவாக சாடியுள்ளார் ஹர்பஜன் சிங். அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறும் ஹர்பஜன் கூறியுள்ளார்.
முன்னதாக, இன்சமாம் உல் ஹக் ஓர் ஊடகப் பேட்டியில், “இந்தியா - பாகிஸ்தான் தொடரின்போது மவுலானா தாரிக் ஜமீல் சொற்பொழிவைக் கேட்ட ஹர்பஜன் சிங் இஸ்லாம் மதத்தைத் தழுவுவதில் நெருங்கிவிட்டார்” என்று கூறியிருந்தார். இது தொடர்பாக பதிலளித்துள்ள ஹர்பஜன் சிங், "யாராவது இன்சமாம் உல் ஹக்கை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர் நல்ல மனநிலையில் இல்லை. அவர் சில பொருத்தமற்ற விஷயங்களைப் பேசியுள்ளார். நான் ஒரு சீக்கியர். ஒரு சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததில் எனக்கு மகிழ்ச்சி. அப்படியிருக்க, இன்சமாம் உல் ஹக் கண்டபடி பேசியுள்ளார். ஊடகத்தின் முன் இப்படிப் பேச அவர் எவ்வளவு குடித்திருந்தாரோ அல்லது என்னத்தை புகைத்திருந்தாரோ தெரியவில்லை. குடிபோதையில் அவர் எதைச் சொல்லியிருந்தாலும் அடுத்த நாள் அது அவர் நினைவில் இருக்காது என்பது மட்டும் உறுதி" என்று கூறியுள்ளார்.
Yeh kon sa nasha pee kar baat kar raha hai ? I am a proud Indian and proud Sikh..yeh Bakwaas log kuch bi bakte hai https://t.co/eo6LN5SmWk
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 14, 2023
முன்னதாக எக்ஸ் தளத்தில் ஹர்பஜன், “நான் ஒரு பெருமித இந்தியன். பெருமித சீக்கியர்” என்று பதிவிட்டிருந்தார். கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதன்மைத் தேர்வாளர் பதிவியில் இருந்து விலகுவதாக இன்சமாம் உல் ஹக் தெரிவித்திருந்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபணமானதும் மீண்டும் பதவியில் தொடர்வேன் எனக் கூறியிருந்தார்.
இன்சமாம் 1991 முதல் 2007 வரையில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர். மொத்தமாக 499 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 20,580 ரன்கள் குவித்துள்ளார். 35 சதங்கள் இதில் அடங்கும். இந்திய அணிக்கு எதிராக 67 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,403 ரன்கள் எடுத்துள்ளார். 2003 முதல் 2007 வரையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்சமாம் ஒருபுறம்... ரஸாக் மறுபுறம்: இதனிடையே, பாகிஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர் அப்துல் ரஸாக் பேசும்போது, “பாகிஸ்தான் அணிக்கு தற்போது ஒரு மன எழுச்சி தேவை. அந்த காலங்களில் யூனிஸ் கான் ஒரு கேப்டனாக ஒரு நல்ல எண்ணம் கொண்டிருந்தார். அது எனக்கு சிறப்பாக செயல்பட நம்பிக்கையை அளித்தது. உண்மையில், பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்களுக்கு இல்லை. நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால், அது ஒருபோதும் நடக்காது" என்று கூறினார். பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஷாகித் அப்ரிடி, உமர் குல் போன்றோர் இதனை சிரித்து கைதட்டி ரசித்தனர். அது சர்ச்சையாகவே அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார். அந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளேயே இன்சமாம் உல் ஹக் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கை விமர்சித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT