Published : 14 Nov 2023 11:08 PM
Last Updated : 14 Nov 2023 11:08 PM
மும்பை: இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியை நேரில் பார்க்க உள்ளார் இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் டேவிட் பெக்கம்.
நாளை மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறும். இந்தப் போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். இந்திய அணி ஐசிசி தொடர்களில் சிறப்பாக செயல்பட்டாலும் நாக்-அவுட் போட்டிகளில் ஏமாற்றம் தருகிறது. இந்த முறை அது மாதிரியான தவறுகள் எதுவும் இருக்காது என நடைபெறுகிறது.
ஏனெனில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் அபார செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது ரோகித் தலைமையிலான இந்திய அணி. ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என சொல்லும் வகையில் இந்திய அணியின் ஆட்டம் அமைந்துள்ளது. முதல் சுற்றில் 9 போட்டிகளில் விளையாடி 9-லும் வெற்றி பெற்றது. அதன் மூலம் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த சூழலில் இப்போட்டியை காண ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு துறைகளை சேர்ந்த நட்சத்திரங்கள் வான்கடே மைதானத்துக்கு வர உள்ளனர். அந்தப் பட்டியலில் ஒருவராக இடம் பெற்றுள்ளார் டேவிட் பெக்கம். 48 வயதான அவர் இன்டர் மியாமி கால்பந்து கிளப் அணியின் இணை உரிமையாளராகவும் உள்ளார். இந்த அணிக்காக தான் தற்போது மெஸ்ஸி விளையாடி வருகிறார். யுனிசெப் அமைப்பு சார்பில் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல். தற்போது அவர் குஜராத் மாநிலத்தில் உள்ளார். இந்தப் போட்டியை பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் மைதானத்துக்கு நேரில் வருகை தந்து பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT