Published : 14 Nov 2023 09:33 AM
Last Updated : 14 Nov 2023 09:33 AM
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் லீக் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 3-வது டிவிஷன் கிளப் மட்ட கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய பவுலர் காரெத் மோர்கன் ஒரு ஓவரில் 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் முத்கீரபா நேரங் அண்ட் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். மோர்கன் இந்த அணியின் கேப்டன் என்பதும் கூடுதல் சிறப்பு.
40 ஓவர் போட்டியான இந்தப் போட்டியில் சாதனையாளர்/கேப்டன் மோர்கன் அணி முதலில் பேட் செய்து 178 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய சர்பர்ஸ் பேரடைஸ் சிசி அணி கடைசி ஓவர் தொடங்கும் முன் 174/4 என்று வெற்றிக்கு 4 ரன்களே தேவை என்ற நிலையில் இருந்தது. அப்போதுதான் கேப்டன் காரெத் மோர்கன் கடைசி ஓவரி வீசினார் இதில் 5 பேட்டர்கள் கோல்டன் டக் அவுட் ஆயினர்.
முதல் 4 பந்துகளில் விழுந்த 4 விக்கெட்டுகளும் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தவர்களாவார்கள். கடைசி 2 விக்கெட்டுகள் பவுல்டு முறையில் வீழ்த்தப்பட்டு இதுவரை இல்லாத வகையில் 6 பந்துகளில் 6 விக்கெட்டுகள் என்று காரெத் மோர்கன் வரலாறு படைத்தார். ஏற்கெனவே சர்பர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேக் கார்லண்டை வீழ்த்திய மோர்கன் கடைசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி திகைப்பூட்டும் விதமாக தன் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
3 தொடர்ச்சியான பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அது ஹாட்ரிக் என்று அழைக்கப்படுகிறது. இப்போது இது ‘டபுள் ஹாட்ரிக்’ அதாவது ஒரே ஓவரில் எடுக்கப்பட்ட இரட்டை ஹாட்ரிக் என்றும் அழைக்கப்படலாம்.
இந்த சாதனை குறித்து ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு பேட்டி அளித்த மோர்கன், “போட்டியை வெல்வதுதான் குறிக்கோளாக இருந்தது. இந்த ஆண்டு மிகவும் நல்ல முறையில் எங்களுக்குச் சென்று வருகிறது. கடைசி ஓவரை வீச இளம் பவுலர் தயாராக இருந்தார். அப்போதுதான் நான் முடிவெடுத்தேன், நான் தான் கடைசி ஓவரை வீச வேண்டும், நான் வீசினால் அவர்களால் 4 ரன்களை எடுத்து வெற்றி பெற முடியாது என்று கருதினேன்.
முதல் 3 பந்துகளில் 3 விக்கெட்டுகள் என்றவுடன் ஹாட்ரிக் எடுத்து விட்டோம் இனி இந்தப் போட்டியை தோற்பதில் அர்த்தமில்லை என்று திண்ணமாக இருந்தேன். கடைசி பந்தில் ஸ்டம்புகள் பறந்த போது என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. இப்படி ஒன்றை நான் பார்த்ததேயில்லை போன்ற உணர்வு.
அணியில் அனைவரும் குஷியின் உச்சத்திற்குச் சென்று விட்டனர். யாருமே முதலில் நம்பவில்லை, என்ன நடந்தது என்பது புரிய கொஞ்ச நேரம் பிடித்தது. என் வாழ்க்கையின் சிறந்த தருணம், வரலாற்றில் இடம்பிடித்ததற்கு நன்றி” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT