Published : 13 Nov 2023 03:18 PM
Last Updated : 13 Nov 2023 03:18 PM
புதுடெல்லி: ''ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய கால்பந்து அணி தகுதிபெறும் நாள் விரைவில் வரும்'' என்ற கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாகவும் நம்பிக்கையுடனும் தெரிவித்துள்ளார்.
இந்தியா இதுவரை ஃபிஃபா உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றதில்லை. 1990 முதல் தகுதிச் சுற்று ஆட்டங்களில் இந்தியா பங்கேற்று இருந்தாலும், இதுவரை தகுதிபெற முடியவில்லை. இதனியிடையே, 2026-ம் ஆண்டுக்கான ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இதில் இந்திய அணி முதல் சுற்று ஆட்டங்களில் கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் விளையாட உள்ளது. இதில் முதல் 2 இடங்களுக்குள் வந்தால் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியும். இதற்கான தீவிர உழைப்பில் இந்திய கால்பந்து அணி ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில், 2026-ம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு நிச்சயம் தகுதி பெறுவோம் என்று இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், "ஃபிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்கும் தருணம் விரைவில் வரும். அது நடக்கும் நாள், ஒட்டுமொத்த இந்தியாவும் கால்பந்து விளையாட்டை கொண்டாடும். ஓர் இந்தியனாக, அது என் வாழ்க்கையின் சிறந்த நாட்களில் ஒன்றாக இருக்கும். அந்த நாளைக் காண காத்திருக்க முடியாத என்னைப் போன்ற பலர் இருக்கிறார்கள். இந்தியா அச்சாதனையை அடையும்போது அது மிகப்பெரிய ஒன்றாக இருக்கும். அது முழு தேசத்துக்கும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையும் கொண்டு வரும். என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத ஒன்றாக அச்சாதனை அமையும்.
எனக்கு 39 வயது ஆகிறது. இதனால், என்னை பொறுத்தவரை நீண்ட கால இலக்கு என்பது எனக்கு தற்போது இல்லை. அடுத்த மூன்று மாதங்கள் பற்றியே இப்போது என் கவனங்கள் முழுவதும் உள்ளது. அடுத்த மூன்று மாதங்கள் எப்படி நடக்கிறது என்பதை பார்ப்போம். மேலும், இப்போது உடல் ரீதியாக நன்றாக இருப்பதாகவே உணர்கிறேன். இதனால், இந்திய அணிக்கும், கிளப் அணிக்கும் என்னால் பங்களிக்க முடிகிறது. ஆனால், இன்னும் எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள், எத்தனை ஆண்டுகள் பங்களிக்க முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. என்னால் ரசித்து விளையாட முடியாத நாளில், என்னால் பங்களிப்பை கொடுக்க முடியாத நாளில் ஓய்வு பெறுவேன்" எனக் கேப்டன் சுனில் சேத்ரி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT