Published : 13 Nov 2023 04:52 AM
Last Updated : 13 Nov 2023 04:52 AM

“கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக...” - அதிகாலை 3 மணிக்கு தெருவோர மக்களுக்கு உதவிய ஆப்கன் வீரர்

அகமதாபாத்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிகாலை 3 மணிக்கு அகமதாபாத் நகரத்தில் தெருவோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உதவிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் இந்த வீடியோ தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிகாலை 3 மணிக்கு அகமதாபாத் நகரத்தில் தெருவோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே ரூ.500 பணத் தாள்களை அவர்கள் அருகில் போட்டுவிட்டுச் செல்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதில், "இந்த மாத தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரட்டுவதற்காக அயராமல் உழைத்துவரும் வேளையிலும் வெளிநாட்டில் ரஹ்மானுல்லா காட்டிய இந்த கருணை எங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஜானி" என்றும் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தது ஆப்கானிஸ்தான் அணி. கடந்த அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் பங்கேற்று விளையாடிய 10 அணிகளில் ஒன்றாக ஆப்கனும் இருந்தது. இது அந்த அணி பங்கேற்று விளையாடிய மூன்றாவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். பெரும்பாலான விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள், ரசிகர்கள் என அனைவரது கணிப்பையும் தவிடு பொடி ஆக்கும் வகையில் தான் ஆப்கன் வீரர்களின் ஆட்டம் இருந்தது.

முன்னாள் உலக சாம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தியது. தொடர்ந்து நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயம் காட்டியது. மும்பையில் ஆஸ்திரேலிய அணியின் முதல் 7 விக்கெட்களை 91 ரன்களுக்குள் கைப்பற்றி இருந்தது. ஆனால், மேக்ஸ்வெல் அந்த வெற்றியை ஆப்கனிடம் இருந்து பறித்தார். இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றது. வங்கதேசம், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இது உலகக் கோப்பை தொடரில் ஆப்கனின் சிறந்த செயல்பாடு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x