Published : 13 Nov 2023 04:28 AM
Last Updated : 13 Nov 2023 04:28 AM

ODI WC 2023 | 9 போட்டிகளில் தோல்வியே இல்லாமல் விளையாடியது எப்படி? - விவரித்த ரோகித் சர்மா

பெங்களூரு: "உலகக் கோப்பையில் ஒன்பது லீக் ஆட்டங்களிலும் நாங்கள் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. லீக் சுற்று முடிவில், இந்திய அணி விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே அணியாக, அரையிறுதிக்குள் செல்கிறது.

போட்டிக்கு பின் பேசிய ரோகித் சர்மா, "இத்தொடர் தொடங்கியதில் இருந்து எங்களைப் பொறுத்தவரை, ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே இலக்காக வைத்துக்கொண்டோம். ஒருபோதும், ஒட்டுமொத்த போட்டியையும் நினைத்து விளையாடவில்லை. அணியில் எல்லோரும் அப்படியே செய்தார்கள். ஏனென்றால், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சூழ்நிலைகளில் விளையாடுவதால், அதற்கேற்ப மாற்றி விளையாட வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்தோம். இந்த ஒன்பது ஆட்டங்களிலும் நாங்கள் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல் போட்டியில் இருந்து இப்போதுவரை யாரேனும் ஒருவர் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தனிப்பட்ட ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து அணிக்கான வேலையைச் செய்ய விரும்புவது அணிக்கான ஒரு நல்ல அறிகுறி. ஆம், இந்தியாவின் கண்டிஷன்கள் எங்களுக்கு நநன்றாகவே தெரியும். இங்கு மற்ற அணிகளை விட நாங்கள் அதிகமாக விளையாடியுள்ளோம். உண்மைதான், ஆனால்.. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அணிகளை எதிர்த்து வெவ்வேறு சூழ்நிலைகளில் விளையாடுவது என்பது சவால் நிறைந்தது. அதற்கேற்பவும் எங்களை தயார்படுத்திக் கொண்டோம்.

இத்தொடரில் முதல் நான்கு போட்டிகள் முதலில் சேசிங் செய்தோம். மற்ற போட்டிகளில் முதலில் பேட்டிங். இரண்டிலும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன்களை சேகரித்ததால், ஸ்பின்னர்களுடன் சேர்ந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அணியின் வெற்றியைக் கவனித்துக்கொண்டனர். டிரஸ்ஸிங் அறை சூழலை கலகலப்பாக வைத்திருக்க போட்டியின் முடிவுகள் முக்கியம். நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும், எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நமது கையில் என்ன உள்ளதோ அதில் மட்டுமே கவனம் செலுத்தினோம்.

தொடரின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை, மைதானத்தில் போட்டியை மிகவும் வேடிக்கையாகவும், உற்சாகமாகவும் விளையாட விரும்பினோம். அதுவே, தற்போது எங்கள் ஆட்டத்தில் பிரதிபலிக்கிறது. இதுமாதிரியான செயல்களை செய்ய முயற்சிக்கும்போது, வெளியில் இருக்கும் சூழல்களை நன்றாக வைத்திருக்க வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் வீரர்கள் எந்த சுமையும் இல்லாமல் விளையாடுவார்கள். அதையே நாங்களும் செய்தோம்.

ஐந்து பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது, அதற்கேற்ப ஆப்ஷன்களை அணிக்குள் உருவாக்க வேண்டும். இன்றைய போட்டியில் மட்டுமே 9 பவுலர்களை முயற்சித்தோம். பவுலிங் யூனிட்டில் வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சி செய்து, எங்களால் என்ன சாதிக்க முடியும் என்பதைப் பார்க்க விரும்பியதால் அப்படி செய்தோம்." இவ்வாறு பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x