Published : 11 Nov 2023 08:26 AM
Last Updated : 11 Nov 2023 08:26 AM

வங்கதேச அணியுடன் இன்று மோதல்: வெற்றியை தொடரும் முனைப்பில் ஆஸ்திரேலியா

புனே: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று காலை 10.30 மணிக்கு புனேவில் உள்ள மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்விகளின் 12 புள்ளிகள் பெற்று ஏற்கெனவே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இதனால் இன்றைய ஆட்டம் அந்த அணிக்கு அரை இறுதி சுற்றுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கக்கூடும். 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தொடரை அடுத்தடுத்த தோல்விகளுடன் தொடங்கிய போதிலும் அதன் பின்னர் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை குவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல்லின் போராட்டம் நிறைந்த இரட்டை சதம் காரணமாகவே ஆஸ்திரேலிய அணி அரை இறுதி சுற்றில் கால்பதித்தது. அந்த ஆட்டத்தில் 292 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட் களை பறிகொடுத்து பரிதவித்தது. எனினும் சாத்தியம் இல்லாத சூழ்நிலையில் உடலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்ட போதிலும் மேக்ஸ்வெல் தனது தாக்குதல் ஆட்டத்தால் தனிநபராக போட்டியை வென்று கொடுத்தார். அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டதால் இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும்.

வங்கதேச அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அரை இறுதிக்கு முன்னேறும் வாயப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறிய முதல் அணியான வங்கதேசம் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே 8-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டு 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெற முடியும். இடது ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷகிப் அல் ஹசன் தொடரில் இருந்து விலகி உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ அணியை வழிநடத்த உள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்டிங்கும், நடுவரிசை பேட்டிங்கும் சரிவை சந்தித்திருந்தது. அதிலும் நடப்பு தொடர் முழுவதுமே நடுவரிசை பேட்டிங்கில் இருந்து நிலையான செயல் திறன் இல்லாமல் உள்ளது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் தீர்வு காண ஆஸ்திரேலிய அணி வீரர்கள் முயற்சிக்கக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x