Published : 10 Nov 2023 04:56 PM
Last Updated : 10 Nov 2023 04:56 PM
பெங்களூரு: உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்வது குறித்து அந்நாட்டு முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கிண்டலாக கொடுத்துள்ள ஐடியா பேசுபொருளாகியுள்ளது. நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன. அடுத்த சுற்றுக்கு நான்காவது அணியாக முன்னேற உள்ள அணி எது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நேற்று, பெங்களூருவில் இலங்கையை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வீழ்த்தியது. இதன் மூலம் அந்த அணிக்கு நாக்-அவுட் சுற்றில் நான்காவது அணியாக முன்னேறும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.
அதேநேரத்தில் நான்காவது அணியாக பாகிஸ்தானும் முன்னேறும் வாய்ப்பு உள்ளது. ஆனால், நாளை (சனிக்கிழமை) கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி, அசாத்திய வெற்றியை பெற வேண்டும். பாகிஸ்தான் 287 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வெல்ல வேண்டும். அல்லது இங்கிலாந்தை 150 ரன்களுக்குள் சுருட்டி, அந்த இலக்கை 3.4 ஓவர்களில் எட்ட வேண்டும். அதன் மூலம் நியூஸிலாந்தை ரன் ரேட் அடிப்படையில் முந்தலாம். அப்படி இல்லாமல் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து அரை இறுதியில் விளையாடும்.
இதனிடையே, தனியார் டிவியில், பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுவது குறித்த நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டது. இதில், பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான்கள் வாசிம் அக்ரம், மொயீன் கான், மிஸ்பா உல் ஹக் மற்றும் சோயப் மாலிக் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளர், பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெற வாசிம் அக்ரம் கிண்டலாக சொன்ன ஐடியாவை வெளிப்படுத்தினார். அதன்படி, ''பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து அதிக ரன்கள் குவிக்க வேண்டும். பின்னர் இங்கிலாந்து அணியை டிரெஸ்ஸிங் அறையில் 20 நிமிடங்கள் பூட்டி வைத்து அனைவரையும் 'டைம்டு அவுட்' செய்துவிட்டால் பாகிஸ்தான் எளிமையாக வெற்றிபெறும்'' என்று வாசிம் அக்ரம் கூறியதாக நிகழ்ச்சி தொகுப்பாளர் வெளிப்படுத்தினார். இந்த கிண்டல் ஐடியாவால் நிகழ்ச்சியில் முன்னாள் வீரர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
அப்போது இடைமறித்த மற்றொரு முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் இன்னும் சிறந்தொரு ஐடியா இருக்கிறது என்று கூறி, ''பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்து அணியை அறையில் வைத்து பூட்டிவிட்டால் பாகிஸ்தான் கடினமாக உழைக்க வேண்டி இருக்காது" என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
How can Pakistan still qualify for the semi-finals? @wasimakramlive has a hilarious idea.#ASportsHD #ARYZAP #CWC23 #ThePavilion #WasimAkram #MoinKhan #FakhreAlam #MisbahulHaq #NZvSL pic.twitter.com/iaCH6CSZSa
— ASports (@asportstvpk) November 9, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT