Published : 04 Jan 2018 04:22 PM
Last Updated : 04 Jan 2018 04:22 PM
ஆஷஸ் தொடர் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வியாழனன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ரூட் முதலில் பேட் செய்ய முடிவெடுக்க, முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்துள்ளது.
ஆட்ட முடிவில் டேவிட் மலான் 5 பவுண்டரிகளுடன் எடுத்த 55 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். பேர்ஸ்டோ ஆட்டமிழந்தவுடன் ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட், கமின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த ஜோ ரூட் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
2-வது புதிய பந்து எடுத்தவுடன் ஜோ ரூட் (83) மிட்செல் ஸ்டார்க் பந்தை பிளிக் செய்தார், ஸ்கொயர் லெக்கில் மிட்செல் மார்ஷ் முன்னால் விழுந்து கேட்சைப் பிடிக்க, அரைசதங்களை சதமாக மாற்றுவதில் இன்னொரு முறை கேப்டன் ஜோ ரூட் தோல்வியடைந்தார். கடைசியில் ஜானி பேர்ஸ்டோ 5 ரன்களில் ஹேசில்வுட் பந்தை எட்ஜ் செய்தார். மிக அருமையாக இந்தப் பந்தை வீசினார் ஹேசில்வுட், கிரிசை விட்டு தள்ளிச் சென்று பந்தை உள்ளே கொண்டு சென்று வெளியே லேசாக எடுத்தார், எட்ஜ் ஆனது பெய்ன் கேட்ச் பிடித்தார்.
அதுவரை ஜோ ரூட், டேவிட் மலான் ஆஸ்திரேலியாவுக்கு தலைவலி கொடுத்து 133 ரன்களைச் சேர்த்து வலுவான நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர், ஆனால் கடைசியில் 2 விக்கெட்டுகளைக் கொடுத்து தன் வலுவை தானே வழக்கம் போல் இங்கிலாந்து இழந்தது.
ஸ்மித்துக்கும் ரூட்டுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான், இருவருமே 4 முறை அரைசதங்களை இந்தத் தொடரில் கடந்துள்ளனர், ஸ்மித் ஒரு இரட்டைச் சதத்துடன் 3 சதங்களை எடுத்தார், ஜோ ரூட்டின் அதிகபட்ச ஸ்கோர் 83 மட்டுமே. ஸ்மித் 604 ரன்களை இதுவரை இந்தத் தொடரில் எடுக்க ரூட் அதில் பாதிதான் எடுத்துள்ளார்.
காலையில் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகத் தொடங்க, பிட்சில் கொஞ்சம் ஈரப்பதம், மேகமூட்டமான வானிலை பந்து வீச்சுக்குச் சாதகமாக அமையும் என்று ஸ்மித் டாஸ் தோற்றதை பெரிதாக நினைக்கவில்லை.
ஆனால் மார்க் ஸ்டோன்மேன் விரைவில் ரன் எடுக்கத் தொடங்கினார். 24 பந்துகளில் 4 அருமையான பவுண்டரிகளுடன் அவர் 24 ரன்களை எடுத்திருந்த போது கமின்ஸ் பந்து ஒன்று தேவையை விட சற்றே கூடுதலாக எழும்ப எட்ஜைத் தட்டிச் சென்றது பெய்ன் கேட்ச் எடுக்க ஸ்டோன்மேனுக்குப் ‘பெயின்’, நடையைக் கட்டினார். இந்தத் தொடரில் ஸ்டோன்மேனின் ஸ்கோர் 53, 27, 18, 36, 56, 3, 15, 24. நன்றாக ஆடி அதனை ஒரு பெரிய இன்னிங்ஸாக அவரால் மாற்ற முடியவில்லை, ஆஸி. பந்து வீச்சு அவரது பொறுமையைச் சோதித்து வெற்றி கண்டது. ஜேம்ஸ் வின்ஸ் மற்றொரு வீரர் போராட்டமே வாழ்க்கையானது, பிரிஸ்பனில் அடித்த 83க்குப் பிறகு சரியாக தொடங்கியும் ரன்களை பெரிய அளவில் எடுக்க முடியவில்லை, இன்று அவர் 54 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். கமின்ஸ் விசிய ஷாட், வைடு பந்தை ஆடியிருக்க வேண்டிய தேவையே இல்லை, கட் செய்ய முயன்றார் எட்ஜ் ஆனது வெளியேறினார்.
வின்ஸ் இந்தத் தொடரில் 224 ரன்களை 28 ரன்கள் என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார். அலிஸ்டர் குக் 244 ரன்களுக்குப் பிறகு வழக்கம் போல் தொடக்கத்தில் திணறினார், பிறகு நிதானமாகி 39 ரன்களை எடுத்து ஹேசில்வுட் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார், களநடுவர் அவுட் தரவில்லை, ஸ்மித் சரியாக ரிவியூ செய்து அவுட் வாங்கினார்.
அதன் பிறகுதான் மலான், ரூட் இணைந்து 133 ரன்களைச் சேர்த்தனர், பிறகு 2-வது புதிய பந்தில் ரூட், பேர்ஸ்டோ ஆட்டமிழக்க 233/5 என்று முதல் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து எதிர்மறையாக முடித்தது. நேதன் லயன் ரன்கள் கொடுத்தாலும் சில அருமையான பந்துகளை வீசி பிரச்சினை செய்தார். கமின்ஸ், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளை எடுக்க, ஸ்டார்க் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT