Published : 09 Nov 2023 06:16 PM
Last Updated : 09 Nov 2023 06:16 PM

பேட்டிங்கில் ‘கேப்டன்’ ரோகித் சர்மாவின் அசாத்திய பங்களிப்பு - ஒரு பார்வை | ODI WC 2023

2023 உலகக் கோப்பை இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய அணிக்கு அமைந்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக ‘இன்வின்சிபிள்ஸ்’, அதாவது தோற்கடிக்கப்பட முடியாத அணி என்று இந்திய அணி பெயர் எடுத்துள்ளது. லீக் சுற்றில் 4-ம் இடத்தை பிடிக்கும் அணி இந்திய அணியுடன் அரையிறுதியில் மோத வேண்டும். இதனால், 4-ம் இடத்தில் முடிந்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு அணிகளிடமும் போட்டி நிலவுகிறது, காரணம் இந்திய அணியின் பலம் அப்படி!

இந்த நிலைக்கு இந்தியாவின் பந்து வீச்சு முக்கியமான காரணம் என்றாலும், ரோகித் சர்மாவின் ரிஸ்க்கான அதிரடி ஆட்டத்தின் பங்களிப்பும் முக்கியம் என்றால் மிகையாகாது. இந்த உலகக் கோப்பையில் இதுவரை ரோகித் சர்மாதான் முதல் 10 ஓவர்கள் பவர் ப்ளேயில் அதிக ரன்களை வெகு விரைவாக எடுத்துள்ளார் என்கின்றன புள்ளி விவரங்கள். அதேபோல், இந்த உலகக் கோப்பையில் இதுவரை அதிக சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் அடித்தவரும் அவரே. நடப்பு உலகக் கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி, ரோகித் சர்மா 442 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

ரோகித் சர்மா ஒரு கேப்டனாக பொறுப்பை எடுத்துக் கொண்டு ஆடுகிறார். குறிப்பாக, அதிரடி ஆட்டத்தை இளம் வீரர்களிடத்தில் கொடுத்து தான் சவுகரியமான ஒரு போக்கில் ஆடுவதை அவர் விரும்பவில்லை. 'தானே அதிரடி ஆட்டம் ஆடுவேன், ரிஸ்க் எடுப்பேன்' என்று விளையாடி, அதில் இதுவரை வெற்றியும் அடைந்துள்ளார். 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு கடந்த 10-12 ஆண்டுகளில் இந்திய அணி டாப் 3 ஒருநாள் அணிகளில் இருந்து வருகின்றது. இதற்கு காரணம் தோனி போன பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட பல தரமான வீரர்கள், குறிப்பாக பவுலர்கள் இந்திய அணியை அலங்கரித்து வருகின்றனர்.

உலகக் கோப்பைக்கு முன்பாக ராகுல் திராவிட் மேல் கடும் அதிருப்தியும் விமர்சனங்களும் ரசிகர்களிடம் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால், விமர்சனங்களைத் தாண்டி, கிரேக் சேப்பல் பாணியில் வீரர்களை அவரவருக்குப் பாதுகாப்பாக இருந்து கொண்டிருந்த பிராந்தியத்திலிருந்து அவர்களை வெளியே கொண்டு வந்தது ராகுல் திராவிட்தான். அதாவது, முன்பெல்லாம் விக்கெட்டை இழப்பதற்கு இந்திய வீரர்கள் அஞ்சுவார்கள். ரன் ரேட்டைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் விக்கெட், சராசரி மீதே அதிக கவனம் கொண்டிருப்பார்கள். ஆனால், இந்த உலகக் கோப்பையில் அது முடிவுக்கு வந்துள்ளது. முதலில் இத்தகைய தற்காப்பு பிராந்தியத்தில் இருந்த ரோகித் சர்மா தானே பொறுப்பேற்றுக் கொண்டு அதிரடியை தொடங்கி வைத்து தன்னை அனைவரும் பின்பற்றுமாறு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக பவர் ப்ளேயில் இந்தியா சிறப்பாக இருக்கிறது என்றால், அங்கு டிராவிஸ் ஹெட், இங்கு ரோகித் சர்மாதான். ஆனால், உலகக் கோப்பைக்காக இந்த உத்தியை வகுக்கவில்லை என்கிறார் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர். அதிக ரன்களை அடிக்க வேண்டும். முடிந்தவரையில் ஸ்கோரிங் வாய்ப்புகளை பயன்படுத்தி அதிக ஸ்கோரை எட்ட வேண்டும் என்பது மட்டும்தான் திட்டம். அதாவது, பிட்ச் பெல்ட்டர் பிட்சாக இருந்தால், அடித்து நொறுக்குவது என்று ஆடுகின்றனர். முன்பு அப்படி அல்ல, ஒருவர் நிற்பது ஒருவர் அடிப்பது, விக்கெட்டைப் பாதுகாத்து வைத்து கடைசியில் அடிப்பது என்று இருந்தனர். இப்போது அது முற்றிலும் மாறிவிட்டது, யாராக இருந்தாலும் அடிக்க வேண்டியதுதான்.

ரோகித் இந்த முறையில் ஆடுவதினால் பின்னால் வரும் வீரர்களுக்கு பிரஷர் குறைகிறது. குறிப்பாக விராட் கோலி ரன் ரேட் பற்றிக் கவலைப்படாமல் ஆட முடிகிறது, தன் சொந்த சாதனையைக் கூட எட்ட முடிகிறது, அணியின் நோக்கங்கள் பாதிக்காமல் செயல்பட முடிகிறது என்றால், அதற்குக் காரணம் ரோகித் சர்மாவின் தொடக்க அதிரடியே. அதனைத் தான், ‘மற்ற வீரர்கள் எப்படி ஆட வேண்டும் என்பதை தன் ஆட்டத்தின் மூலம் காட்டுபவர் ரோகித்’ என்கிறார் விக்ரம் ராத்தோர். அதுதான் ரோஹித் சர்மா கேப்டன்சியின் வெற்றியும் கூட!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x