Published : 09 Nov 2023 04:06 PM
Last Updated : 09 Nov 2023 04:06 PM
மும்பை: இந்திய அணி விளையாடும் உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கான மைதானம் இன்னும் இறுதியாகாமல் இருக்கிறது. மேலும், அரையிறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் தாமதமாகியுள்ளது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் ஏற்கெனவே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், தற்போது 3-வது அணியாக ஆஸ்திரேலியாவும் நுழைந்துள்ளது. 14 புள்ளிகளுக்கு எந்த அணியும் இனி பெற முடியாது என்பதால், இந்திய அணி லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்யும். தலா 12 புள்ளிகளை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு தலா ஒரு லீக் ஆட்டம் எஞ்சியுள்ளது.
போட்டி அட்டவணையின் படி லீக் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணி 4-வது இடத்தை பிடிக்கும் அணியை அரை இறுதி சுற்றில் எதிர்கொள்ளும். மற்றொரு அரை இறுதியில் லீக் சுற்றில் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் பலப்பரீட்சை நடத்தும். இந்த வகையில் 2-வது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுவது உறுதியாகி உள்ளது. ஏனெனில், கடைசியாக அரை இறுதி சுற்றுக்குள் நுழையும் அணியால் இந்த இரு அணிகளின் புள்ளிகளை நெருங்க முடியாது.
2-வது அரை இறுதியில் மோதும் அணிகள் தெரிந்துவிட்ட நிலையில் முதல் அரை இறுதியில் இந்தியாவுடன் எந்த அணி விளையாடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. அரை இறுதி சுற்றில் கடைசி அணியாக தகுதி பெறுவதற்கு நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகள் மல்லுக்கட்ட உள்ளன. இதில் இருந்து ஒரு அணிதான் அரை இறுதி சுற்றில் இந்தியாவை சந்திக்கும்.
மைதானம் இறுதியாகாதது ஏன்? - அரையிறுதி போட்டிக்கான மைதானங்களாக மும்பையின் வான்கடே மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் ஆகிய மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. எனினும், இந்த இரண்டு மைதானங்களில் எந்த மைதானத்தில் இந்தியா விளையாடவுள்ளது என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. முதல் அரையிறுதி போட்டி, அதாவது புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணியும், நான்காவது இடம் பிடிக்கும் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுவது என தீர்மானிக்கப்பட்டு இருந்தது. அதேபோல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம்பிடிக்கும் அணிகள் இரண்டாவது அரையிறுதியில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாட திட்டமிடப்பட்டது.
திட்டமிடல்கள் இருந்தாலும், இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. அது, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை. மும்பையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக கூறி, பாகிஸ்தான் அணியை மும்பையில் விளையாட வைக்க கூடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐசிசியை கேட்டுக்கொண்டது. இதற்கு ஒப்புதலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரையிலான பாகிஸ்தான் போட்டிகள் எதுவும் மும்பையில் நடத்தப்படவில்லை. இதனால், ஒருவேளை பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் நான்காவது இடம்பிடிக்கும்பட்சத்தில் இந்திய அணியை எதிர்கொள்ளும். அப்படி நடக்கும் வேளையில் இந்தியாவுக்கான அரையிறுதி போட்டி மும்பையின் வான்கடே மைதானத்துக்கு பதிலாக கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மாற்றப்படும்.
மாறாக, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க வேண்டிய தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்துக்கு மாற்றப்படும். இந்த காரணங்களுக்காகவே இன்னும் இரண்டு அரையிறுதி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நடைபெறாமல் இருக்கிறது. முதல் அரையிறுதி நவம்பர் 15ம் தேதியும், இரண்டாவது அரையிறுதி நவம்பர் 16ம் தேதியும் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT