Published : 09 Nov 2023 07:44 AM
Last Updated : 09 Nov 2023 07:44 AM

மழை அச்சுறுத்தலுக்கு இடையே இலங்கையுடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியில் நியூஸிலாந்து அணி

பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைதொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள்பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. முதல் 4 ஆட்டங்களில் வெற்றிகளை குவித்த அந்த அணி அதன் பின்னர் தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்தது. அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது நியூஸிலாந்து அணி. ஏனெனில் அந்த அணிக்கு இதுதான் கடைசி லீக் ஆட்டம்.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் நியூஸிலாந்து அணியின் அரை இறுதி வாய்ப்பு என்பது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளின் கடைசி லீக் ஆட்டங்களின் முடிவைபொறுத்தே அமையும். ஏனெனில் தற்போதையசூழ்நிலையில் 3 அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் உள்ளன. இருப்பினும் நியூஸிலாந்து அணி 0.398 நிகர ரன் ரேட் அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தான் அணியின் நிகர ரன் ரேட் 0.036 ஆகவும், ஆப்கானிஸ்தானின் நிகர ரன் ரேட் -0.338 ஆகவும் இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (10-ம் தேதி) தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அதேவேளையில் பாகிஸ்தான் தனது கடைசி லீக்ஆட்டத்தில் வரும் 11-ம் தேதி இங்கிலாந்தை சந்திக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களிலும் வெற்றி கண்டால் 3 அணிகளும் தலா 10 புள்ளிகளை பெறும்.இந்த சூழ்நிலை உருவானால் அரை இறுதிக்குமுன்னேறும் கடைசி அணியை தேர்வு செய்வதில் நிகர ரன் ரேட் முக்கிய பங்குவகிக்கும்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவதுடன் நிகர ரன் ரேட் கணக்கீடுகளிலும் நியூஸிலாந்து அணி கவனம் செலுத்தக்கூடும். இது ஒருபுறம் இருக்க இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலோ அல்லது மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலோ நியூஸிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் சூழ்நிலை உருவாகக்கூடும்.

நியூஸிலாந்து அணியின் பேட்டிங் வலுவாக இருக்கும் நிலையில் பந்து வீச்சில் தேக்க நிலையை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதே பெங்களூரு மைதானத்தில் நியூஸிலாந்து அணி 401 ரன்கள் குவித்த போதிலும் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட தவறினர். ஏராளமானரன்களை கசியவிட்டதுடன் பஹர் ஸமானின்தாக்குதல் ஆட்டத்துக்கு எதிராக தடுமாறினார்கள். அனுபவம் வாய்ந்த டிரெண்ட் போல்ட், டிம் சவுதி கூட மாற்று யோசனைகள் இல்லாமல் செயல்பட்டது ஆச்சரியம் அளித்தது.

சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை மிட்செல் சாண்ட்னர் ஆறுதல் அளிப்பவராக இருக்கிறார். அதேவேளையில் கிளென் பிலிப்ஸின் பகுதி நேர சுழற்பந்து வீச்சை சார்ந்திருப்பதின் அபாயங்களை பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி உணர்ந்தது. ஏனெனில் அந்த ஆட்டத்தில் அவர், 5 ஓவர்களில் 42 ரன்களை தாரை வார்த்தார்.

நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சு நடு ஓவர்களிலும், இறுதிப் பகுதியிலும் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக இல்லை. இதை இலங்கை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சரி செய்துகொள்வதில் நியூஸிலாந்து அணி தீவிரம் காட்டக்கூடும். லாக்கி பெர்குசன் முழு உடற்தகுதியை எட்டி உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும்.

பேட்டிங்கில் 523 ரன்கள் வேட்டையாடி உள்ள ரச்சின் ரவீந்திராவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இதேபோன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 95 ரன்கள் விளாசிய கேன் வில்லியம்சனும் மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளார். டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடியவர்கள். தொடக்க வீரரான டேன் கான்வே இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் சதம் விளாசிய நிலையில் அதன் பின்னர் எந்த ஒரு ஆட்டத்தில் அவர், அரை சதம் கூட எட்டவில்லை. இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் டேவன் கான்வே சிறப்பாக தொடக்கம் அமைத்து கொடுப்பதில் கவனம் செலுத்தக்கூடும்.

8 ஆட்டங்களில் 6 தோல்வி, 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ள இலங்கை அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது. எனினும் அந்த அணி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் முனைப்பு காட்டக்கூடும்.

இதற்கிடையே இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதே மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணி மோதிய போதும் மழைகாரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் 401 ரன்களை குவித்த போதிலும் நியூஸிலாந்து அணி டக்வொர்த் லீவிஸ் விதிமுறையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x